சென்னை: அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில்களில் மேற்கொள்ளப்படும் இலவச திருமணத்திற்கான செலவுத்தொகை ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.50ஆயிரமாக உயர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்து சமய அறநிலையதுறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்கள் மூலம் மேற்கொள்ளப்படும் இலவச திருமணத்தில் ஏழை எளிய ஒரு இணைகளுக்கு அனுமதிக்கப்பட்ட திட்டச் செலவு 20,000 லிருந்து ரூ.50,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்து சமய அறநிலையத்துறை சாா்பில், கோவில்களில் இலவச திருமணங்கள் நடத்தி வைக்கப்படுகிறது. இதில் பயன்பெற விரும்புவோர்கள், முக்கிய கோவில்களில் அதற்கான விண்ணப்பத்தை பெற்று பூர்த்தி செய்து ஒப்படைக்க வேண்டும். அதற்காக சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, விண்ணப்பத்தில் மணமகள், மணமகன் புகைப்படம், பிறந்த தேதி, வயது, தொழில், ஜாதி உள்ளிட்ட முழு விவரத்தை தெளிவாக குறிப்பிட வேண்டும். மணமக்களின் பெற்றோர், மணமக்கள் அவசியம் நேரில் வர வேண்டும். இருவரும் இந்துவாக இருப்பதோடு, முதல் திருமணமாகவும் இருக்க வேண்டும். திருமணத்தின்போது அனைத்து ஆவணங்களின் அசல் சான்றிதழ்களை கொண்டு வர வேண்டும்.
மணமகள் அல்லது மணமகன் பெற்றோருடன் கூடிய புகைப்படம் திருமண படிவத்தில் கண்டிப்பாக இணைக்க வேண்டும். திருமணத்துக்கு சமர்ப்பிக் கப்படும் ஆவணம், திருப்பி தர மாட்டாது. அதேபோல் திருமணம் தொடர்பான விவரம், நகல்கள், மணமக்கள் தவிர வேறு யாருக்கும், தனிப்பட்ட முறையில், தகவல் அறியும் உரிமை சட்டம், வேறு எந்த சட்டப்பிரிவின் மூலமும் வழங்கப்படாது என்பன உள்ளிட்ட 13 நிபந்தனைகளுடன் உறுதிமொழி பத்திரம் அளிக்க வேண்டும்.
திருமணத்தின் போது மணமக்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.20 ஆயிரம் மதிப்பிலான சீர்வரிசை பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், தற்போது சீர்வரை பொருட்கள் உள்பட செலவினங்களுக்கான உதவித்தொகையை ரூ.50ஆயிரமாக உயர்த்தி தமிழ்நாடு அரசு உத்தர விட்டுள்ளது.