நதிகளை தேசியமயமாக்க பா.ஜ.கவிடம் சொல்லுங்கள்!: ஜக்கிக்கு பி.ஆர். பாண்டியன் வலியுறுத்தல்

Must read

அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவரும் தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளருமான பி.ஆர். பாண்டியன், விவசாயம் சார்ந்த போராட்டங்களில் தீவிரமாக ஈடுபட்டுவருபவர். இது தொடர்பாக சட்டப்போராட்டங்களும் நடத்திவருபவர். பிரபல சாமியார் ஜக்கி வாசுதேவ் நடத்தும், “நதிகளை மீட்போம், பாரதம் காப்போம்” இயக்கத்திற்கு பி.ஆர். பாண்டியன் ஆதரவு தெரிவித்ததாக ஜக்கியின் ஈசா மையம் சார்பாக தகவல் வெளியானது.

“காடுகளில் நீர்த்தடங்களை அழிக்கிறார், முறைகேடாக கட்டிடங்கள் கட்டியிருக்கிறார், யானைவழிப்பாதையை சட்டத்துக்குப் புறம்பாக அடைத்துவிட்டார் என்றெல்லாம் குற்றச்சாட்டு இருக்கும் ஜக்கி வாசுதேவ் “நதிகளை மீட்போம், பாரதம் காப்போம் என்று இயக்கம் நடத்துகிறார். அதற்கு பி.ஆர். பாண்டியன் ஆதரவு அளிக்கலாமா” என்று பல தரப்பில் இருந்தும் விமர்சனம் எழுந்துள்ளது.

இதையடுத்து நாம் பி.ஆர். பாண்டியனை தொடர்புகொண்டு பேசினோம்.

அவர், “ஜக்கியின் ஈசா மையத்தைச் சேர்ந்த சிலர் மன்னார்குடியில் இருக்கும் என் வீட்டுக்கு வந்து, “நதிகளை மீட்போம் பாரதம் காப்போம்” இயக்கத்திற்கு ஆதரவு கேட்டனர். அவர்களிடம் நான், “நதிகளை உயிர்ப்பிக்க வேண்டும் என்ற தங்கள் நோக்கத்தை வரவேற்கிறேன். நதி குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட நீங்கள் பிரச்சாரம் செய்வதை வாழ்த்துகிறேன். அதே நேரம் இதனால் மட்டும் பயனில்லை. நதிகளை தேசியமயமாக்கினால்தான் பலன் கிடைக்கும். இன்றைக்கு பாஜக அரசுடன் ஈசா மையம் நெருக்கமாக இருக்கிறது. ஈசா நடத்தும் ஆதியோகி சிலை திறப்புக்கு பிரதமர் மோடி தனி விமானத்தில் வருகிறார்.

ஆகவே நதிகளை தேசியமயமாக்க வேண்டும் என்று பாஜக அரசிடம்.. பிரதமர் மோடியிடம் வலியுறுத்துங்கள். இன்று பாஜக வலிமையாக இருக்கிறது. அடுத்த தேர்தலுக்குப் பிறகு வலிமை கூடவும் செய்யலாம், இழக்கவும் செய்யலாம். ஆகவே இப்போதே நதிகளை தேசியமாக்க மத்திய பாஜக அரசை வலியுறுத்தும்படி ஜக்கி வாசுதேவிடம் சொல்லுங்கள்  என்று தெரிவித்தேன்.  மேலும், யமுனை ஆற்றை அசுத்தப்படுத்தியதாக ஸ்ரீலஸ்ரீ ரவிசங்கருக்கு பல கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருப்பது குறித்தும் பேசினேன்.

அதோடு, ஜக்கி வாசுதேவ், தனது ஈசா ஆசிரமத்தில் ஆதியோகி சிலை திறக்க மோடி வந்தபோது நாங்கள் கருப்புக்கொடி காட்டியதையும் கூறினேன். அப்போது விவசாயிகள் தற்கொலை அதிகரித்திருந்த நேரம். அப்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை தடுக்கும் வகையில் பாராளுமன்றத்தில் அவசர சட்டத்தை பாஜக அரசு கொண்டு வந்தது. இதைக் கண்டித்து நாங்கள் கருப்புக்கொடி காட்டினோம். எங்களுடன் கோவை ராமகிருஷ்ணனின் த.பெ.தி.க. உட்பட பல அமைப்புகள் கருப்புகொடி காட்டின. அவர்கள், ஜக்கி வாசுதேவ் இயற்கையை அழிப்பதாகக்கூறி கருப்புகொடி காட்டினர். இதையெல்லாம் இன்று என்னை சந்தித்த ஈசா மையத்தினரிடம் தெரிவித்தேன்.

மேலும் தங்களது இயக்கத்துக்கு நான் ஆதரவு தெரிவிப்பதாக பத்திரிகை செய்தி அளித்தீர்களானால் எனது இந்த கருத்துக்களையும் சேர்த்து கொடுங்கள் என்றேன். அவர்கள் அப்படி கொடுக்கவில்லை போலிருக்கிறது” என்று விளக்கம் அளித்தார் பி.ஆர். பாண்டியன்.

More articles

Latest article