டில்லி

பிரதமர் மோடி சர்வதேச பொருளாதார மாநாட்டில் பேசும் போது டெலிபிராம்ப்டர் கருவி பழுதானது குறித்து ராகுல் காந்தி கிண்டல் செய்துள்ளார்.

சுவிட்சர்லாந்தில்  உலக பொருளாதார கூட்டமைப்பின் 5 நாள் மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் பல உலக நாடுகளின் தலைவர்கள் காணொலி மூலம் பங்கேற்று பேசி வருகின்றனர்.  இந்த மாநாட்டில் நேற்று இரவு பிரதமர் மோடி சிறப்புரை ஆற்றினார். அவர் பேசியபோது டெலிபிராம்டர் கருவி திடீரென பழுதானதால் பிரதமர் உரை தடைப்பட்டது.

பிரதமர் மோடி சில நொடி தடுமாற்றத்திற்குப் பிறகு சுதாரித்துக்கொண்டு நேரலையில் இருந்த உலக பொருளாதார கூட்டமைப்பு நிர்வாகியிடம் தனது குரல் உங்களுக்கு கேட்கிறதா? என்று கூறி நிலைமையை ஓரளவுக்குச் சமாளித்தார்.  டெலிபிராம்ப்டர் கருவி சரியானதும் தனது சிறப்புரையை பிரதமர் தொடர்ந்தார். டெலிபிராம்ப்டர் கருவி பழுதானதால் சர்வதேச நேரலை நிகழ்வு ஒன்றில் பிரதமர் உரை தடைப்பட்டது குறித்து அரசியல் தலைவர்கள் மற்றும் இணைய செயற்பாட்டாளர்கள் கடும் விமர்சனம் செய்துள்ளனர்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி; இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் டெலிபிராம்டரால் கூட பிரதமரின் பொய்யைத் தாங்க முடியவில்லை என்று கிண்டல் செய்துள்ளார். டெலிபிராம்டரும் அதனை இயக்குபவரும் இல்லை என்றால் பிரதமர் மோடியால் உரையாற்றவே முடியாது என்று ராகுல் காந்தி முன்பு பேட்டி ஒன்றில் தெரிவித்த காணொளியும் தற்போது இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

டெலிபிராம்ப்டர் பழுதானதால் பிரதமர் மோடி தடுமாறியது சமூக ஊடகங்களிலும் விவாத பொருளாகி உள்ளது.