ஐதராபாத்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விவேக் வெங்கடாசலம் பாஜகவில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்துள்ளார்.
ஆந்திராவில் இருந்து பிரிந்து தெலுங்கானா தனி மாநிலம் உருவாகி, தற்போது 3-வது சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. ஏற்கனவே தெலுங்கானாவில் 2014, 2018 இல் நடந்த தேர்தல் முடிவுகளை ஒப்பிடுகையில் இந்த தேர்தல் யாருக்குச் சாதகமாக அமையக் கூடிய சாத்தியங்களையும் புரிந்து கொள்ள முடியும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
தெலுங்கானாவில் மொத்தம் 119 தொகுதிகள் உள்ளன. இம்மாநிலத்தில் பெரும்பான்மைக்குத் தேவை 60 இடங்கள் ஆகும். தெலுங்கானா மாநிலத்தில் வரும் 30-ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. தெலுங்கானாவில் ஆளும் கட்சியாக உள்ள பாரத் ராஷ்டிரிய சமிதி, பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான விவேக் வெங்கடசாமி பா.ஜ.க.வில் இருந்து விலகுவதாக மாநில தலைவர் கிஷண் ரெட்டிக்கு கடிதம் அனுப்பினார். பாஜகவின் மாநிலத் தலைவருக்கு அனுப்பிய ராஜினாமா கடிதத்தில், “கனத்த இதயத்துடன், பாஜகவில் இருந்து ராஜினாமா செய்கிறேன். எனது பதவிக் காலத்தில் நீங்கள் அளித்த ஆதரவுக்கு நன்றி” எனக் கூறியுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முன்னிலையில் பாஜகவில் இருந்து விலகிய விவேக் வெங்கடசாமி காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.