ஐதராபாத்
மருத்துவர் பலாத்கார கொலையாளிகள் என்கவுண்டர் குறித்து தெலுங்கானா உயர்நீதிமன்றம் விசாரணை செய்ய உள்ளதால் மரணமடைந்த நால்வர் உடலை திங்கள் வரை பாதுகாக்க உத்தரவிட்டுள்ளது.
ஐதராபாத் நகரில் தெலுங்கானாவை சேர்ந்த பெண் மருத்துவர் சுங்கச்சாவடி அருகே இரு சக்கர வாகனத்தை வைத்து விட்டு பணிக்குச் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த லாரி ஒட்டுநர்கள் மற்றும் கிளீனர்கள் அவருடைய இரு சக்கர வாகனத்தைப் பஞ்சர் செய்துள்ளனர். திரும்பி வந்த பெண் மருத்துவருக்கு உதவி செய்வது போல் நடித்து நால்வரும் அவரை கடத்திச் சென்று பலாத்காரம் செய்து கொன்று அவர் உடலை எரித்துள்ளனர்.
இது குறித்து கைது செய்யப்பட்ட நால்வரை நேற்று காலை சம்பவம் நடந்த இடத்துக்கு காவல்துறையினர் விசாரணைக்காகக் கூட்டிச் சென்றனர். அப்போது அவர்கள் தப்பிக்க முயன்றதால் என்கவுண்டர் செய்யப்பட்டுக் கொல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இந்த என்கவுண்டர் குறித்து தெலுங்கானா உயர்நீதிமன்றம் திங்கள் கிழமை விசாரணை நடத்த உள்ளது.
நேற்று இந்த நால்வரின் உடல் மெகபூப் நகரில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. அந்த பரிசோதனை வீடியோ பதிவு ஆக்கப்பட்டு அந்த வீடியோ பதிவைத் தெலுங்கானா தலைமை அரசு வழக்கறிஞர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் நேற்று இரவு அளித்துள்ளார்.
வரும் திங்கள் அன்று காலை 10.30 மணிக்கு இந்த என்கவுண்டர் குறித்து தெலுங்கானா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியின் கீழ் உள்ள அமர்வு விசாரிக்க உள்ளது. ஆகவே என்கவுண்டரில் மரணம் அடைந்த நால்வரின் உடலையும் அதுவரை பத்திரமாக வைத்திருக்க உயர்நீதிமன்றம் உத்தரவு இட்டுள்ளது.