தராபாத்

தெலுங்கானா மாநிலத்தில் மே 7 வரை ஊரடங்கு நீட்டித்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

நாடெங்கும் கொரோனா பரவுதலைக் கட்டுப்படுத்த ஏப்ரல் 14 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.   ஆயினும் கொரோனா கட்டுக்குள் வராததால் மத்திய அரசு மே 3 வரை ஊரடங்கை நீட்டித்துள்ளது.   அத்துடன் நேற்று முதல் கொரோனா கட்டுக்குள் உள்ள பகுதிகளில் ஓரளவு விதிகளைத் தளர்த்தலாம் எனவும் அதை அந்தந்த மாநில அரசுகள் முடிவு செய்யலாம் எனவும் மத்திய அரசு அறிவித்தது

தெலுங்கானா முதல்வர் ச்ந்திரசேகர ராவ் இது குறித்து அமைச்சர்களுடன் கலந்தாலோசித்தார்.  அதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம், “மத்திய அரசு அறிவித்தபடி தளர்வுகள் ஏதும் தெலுங்கானா மாநிலத்தில் இருக்காது.  மாறாக மத்திய அரசு அறிவித்த மே 3 ஆம் தேதியை விட அதிகமாக மே 7 வரை ஊரடங்கு அமலில் இருக்கும்.

தெலுங்கானா மாநிலத்தில் மே 1 ஆம் தேதிக்குள் கொரோனா தொற்று கட்டுக்குள் வர வாய்ப்புள்ளத்யு.எனவே 7 ஆம் தேதி வரை ஊரடங்கைப் பின்பற்றுவது நல்லது என்னும்  எண்ணத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.  வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு மே மாதம் ரூ.1500 வழங்கப்படும்.

அரசு ஊழியருக்கு மே மாதமும் ஊதிய பிடித்தம் செய்யப்பட்டு  மாத ஊதியம் பெறுவோருக்கு 75% மட்டுமே வழங்கப்படும்.   வீட்டு உரிமையாளர்கள், மார்ச், ஏப்ரல், மே ஆகிய 3 மாதங்களுக்கு வீட்டு வாடகையைக் கண்டிப்பாகக் கேட்கக்கூடாது.

தனியார் பள்ளிகள் வரும் கல்வி ஆண்டில் கல்விக் கட்டணத்தை ஒரு ரூபாய் கூட உயர்த்தக் கூடாது. கட்டணங்களை மாதத் தவணையில் பெற்றுக் கொள்ள வேண்டும். மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

விமானப் போக்குவரத்துக்கும் மே 7 ஆம் தேதி வரை தடை நீட்டிக்கப்படுகிறது.” என தெரிவித்தார்.