டெல்லி: தெலுங்கானா மாநிலத்தில் கவர்னருக்கும், மாநில அரசுக்கும் இடையே மோதல் நீடித்து வரும் நிலையில், கவர்னர் தமிழிசைக்கு எதிராக தெலுங்கானா மாநிலஅரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. அதில், மாநில அரசின் மசோதாக்களுக்கு அனுமதி தர மறுப்பதாக குற்றம் சாட்டி உள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் ஆட்சி செய்து வரும், தெலுங்கானா ராஷ்டிரிய சமீதி (தற்போது பாரத் ராஷ்டிரிய சமீதி) கட்சி தலைவர் சந்திரசேகரராவுக்கும், மத்திய பாஜக அரசுக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது. இந்த விவகாரத்தில் மாநில கவர்னரையும், அவர் புறக்கணித்து வருவது மட்டுமின்றி தரக்குறைவாகவும் பேசி வருகிறார்.
இதனால், கவர்னருக்கும், முதல்வருக்கும் இடையேயான சர்ச்சை நீடித்து வருகிறது. இந்த நிலையில், நடப்பாண்டு சட்டப்பேரவை கூட்டத் தொடர் விவகாரத்திலும் சர்ச்சை ஏற்பட்டது. ஆனால், உச்சநீதிமன்றம் மாநில அரசை எச்சரித்த நிலையில், சட்டப்பேரவையில் கவர்னர் உரையாற்ற அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்த நிலையில், மாநில அரசு இயற்றும் மசோதாக்களுக்கு கவர்னர் அனுமதிதர மறுப்பதாக சந்திரசேகராவ்அரசு சார்பில் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
தெலுங்கானா தலைமைச்செயலாளர் ஏ.சாந்திகுமார் சார்பில் உச்சநீதிமன்றத்தில், வழக்கறிஞர் உதய்குமார் சாகர் மனுத்தாக்கல் செய்துள்ளார். அவரது மனுவில், அசாமாபாத் தொழிற்சாலை பகுதி திருத்த மசோதா, நகராட்சி திருத்த மசோதா, அரசு வேலைவாய்ப்பு திருத்த மசோதா, வன பல்கலைக்கழக மசோதா, பல்கலைக்கழகங்கள் வேலை நியமன வாரிய மசோதா, மோட்டார் வாகன வரி மசோதா உள்பட 10 மசோதாக்கள் தெலுங்கானா சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்டன. இந்த மசோதாக்கள் கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் 14-ந்தேதி தொடங்கி நிலுவையில் இருந்து வருகின்றன. ஆனால் இதுவரை கவர்னர் ஒப்புதல் அளிக்கவில்லை.
அரசின் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் உள்ள விவகாரத்தில் அரசியலமைப்பு சட்டம் அளித்துள்ள உரிமைகளை மீறி கவர்னர் நடந்து கொள்வது வழக்கத்துக்கு மாறான, சட்டவிரோதமான, அரசியலமைப்பு சட்டம் அளித்துள்ள உரிமைகளுக்கு எதிரான செயல் என அறிவிக்க வேண்டும். நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க கவர்னருக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.