சென்னை: ஆளுநராக இருந்தாலும் அண்ணன் மகளாக அழுது கொண்டு இருக்கிறேன் என்று வசந்தகுமார் எம்.பி. மறைவுக்கு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கண்ணீருடன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கன்னியாகுமரி தொகுதி, எம்.பி. வசந்தகுமார் காலமானார். இது குறித்து தெலுங்கானா ஆளுநரும், தமிழக முன்னாள் பாஜக தலைவருமான தமிழிசை சௌந்தரராஜன் தமது உருக்கமான இரங்கலை தெரிவித்துள்ளார்.

டுவிட்டர் பதிவில் அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி வருமாறு:

சித்தப்பா !

நீங்கள் இல்லை என்பதை என் மனது நம்ப மறுக்கிறது… என் சிறு வயது முதல் அவருக்கு திருமணம் வரை ஒன்றாகவே வளர்ந்தோம்… அப்பா குமரி அனந்தனின் அரசியல் தாக்கம் இரண்டு பேரிடமும் இருந்தது ஆனால் வேறு வேறு பாதையில் பயணித்தோம்…

இயக்கம் வேறாக இருந்ததால் இணக்கமாக இல்லையே தவிர இரத்தப்பாசம் இருவரிடமும் உண்டு, தூரத்தில் இருந்தே அவரின் சுறுசுறுப்பையும், துருதுருப்பையும் கண்டு வியந்திருக்கிறேன்…

சிறுவயதில் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட்டது ,சண்டையிட்டது எல்லாம் நினைவிற்கு வருகிறது… வசந்த் & கோ என்ற சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி பலபேருக்கு பணிகொடுத்த தருமம்கூட காப்பாற்றவில்லையே என்று மனம் பதைபதைக்கிறது…

கண்டிப்புடன் கண்ணீரை அடக்க முயற்சித்தாலும் … கரைபுரண்டு கண்ணீர் பெருகுகிறது…  ஆளுநராக இருந்தாலும் அண்ணன் மகளாக அழுது கொண்டிருக்கிறேன்… என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.