ஐதராபாத்:

தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவின் மகனும், அமைச்சருமான ராம ராவ் 2 மணி நேரத்தில் ஐஸ்கிரீம் மற்றும் பழச்சாறு விற்பனை செய்து ரூ. 7.30 லட்சம் வருவாய் ஈட்டியுள்ளார்.

தொழிலதிபராக அவர் இந்த வருவாயை ஈட்டிவில்லை. அவர் சார்ந்துள்ள தெலங்கானா ராஷ்ட்ரிய சமீதி கட்சியின் நிறுவன நாள் விழா பொதுக்கூட்டம் இந்த மாத இறுதியில் நடக்கிறது. இதற்கான நிதியை தான் அவர் இவ்வாறு திரட்டினார். மாநில தகவல் மற்றும் தொழில்நுட்ப துறை அமைச்சரான ராமா ராவ் குத்தூ க்புல்லாப்பூர் பகுதியில் உள்ள ஒரு ஐஸ்கிரீம் பார்லரில் இந்த சம்பவம் நடந்தது.

எப்படி ஒரு நபர் சில மணி நேரங்களில் ஐஸ்கிரீம் விற்று பல லட்ச ரூபாய்களை சம்பாதிக்க முடியும் என்று கேள்வி எழலாம்…

ஆம்.. அந்த கட்சியின் எம்பி மல்லா ரெட்டி ரூ 5 லட்சத்துக்கும், அக்கட்சியின் மற்றொரு தலைவரான சீனிவாச ரெட்டி ரூ. 1 லட்சத்துக்கும் ஐஸ்கிரீம் வாங்கினர். மேலும் பழச்சாறு கடையில் கட்சியின் மற்ற தலைவர்கள் ஜூஸ் வாங்கியதன் மூலம் ரூ. 1.30 லட்சத்தை சம்பாதித்தார்.

நேற்று கட்சி நிர்வாகிகள் அனைவரும் கூலித் தொழிலாளிகளாக பணியாற்றினர். ஏப்ரல் 14ம் தேதி முதல் 20ம் தேதி வரை கூலிகள் தினம் கொண்டாடப்படும் என்று முதல்வர் அறிவித்திருந்தார். கட்சியினர் ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் 2 நாட்கள் கூலித் தொழிலாளிகளாக பணியாற்ற வேண்டும் என்று அவர் உத்தரவிட்டிருந்தார்.

இதன் மூலம் முதல்வர், அனைத்து அமைச்சர்கள், எம்எல்ஏ.க்கள் 2 நாட்களுக்கு கூலித் தொழிலாளிகளாக பணியாற்றுகின்றனர். கட்சி ஆட்சி அமைத்தபோது 51 லட்சம் உறுப்பினர்கள் இருந்தனர். தற்போது வரை 75 லட்சத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர்.

உறுப்பினர் சந்தா மூலம் ரூ. 25 கோடி நிதி திரட்ட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வரும் 21ம் தேதி ஐதராபாத் அருகில் கோம்பல்லி மற்றும் 27ம் தேதி வாராங்கல்லில் கட்சியின் நிறுவன நாள் விழாவை கொண்டாட அக்கட்சி திட்டமிட்டுள்ளது.