பாட்னா
பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் பாஜகவை வீழ்த்துவதே தங்கள் ஒரே இலக்கு எனக் கூறி உள்ளார்.
வரும் 2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் நோக்கத்தில், கடந்த ஏப்ரல் 11-ம் தேதி பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் டெல்லி சென்றிருந்தார். அவர் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கே ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதோடு, டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் மற்றும் கம்யூனிசத் தலைவர்கள் சீதாராம் யெச்சூரி, டி.ராஜா ஆகியோரையும் சந்தித்து பேசினார்.
கடந்த ஏப்ரல் 24-ம் தேதி உத்தரப்பிரதேச மாநில எதிர்க்கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவை லக்னோவில் சந்தித்துப் பேசிய அவர், பிறகு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியை கொல்கத்தாவில் சந்தித்து எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைப்பு குறித்து பேச்சு வார்த்தை நடத்தினார். பிறகு கடந்த 10ம் தேதி புவனேஸ்வர் வந்த நிதிஷ் குமார், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கை சந்தித்தார். நிதிஷ் குமார் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ்,
“நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் பா.ஜ.க-வை வீழ்த்துவது எளிது என்பது தான் கர்நாடக தேர்தல் முடிவு நமக்கு அளித்திருக்கும் செய்தி. அதை வலியுறுத்தித்தான் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் பணியை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம். எங்கள் நோக்கம் பிரதமராக, முதல்வராக வருவதல்ல, மாறாக பா.ஜ.கவை வீழ்த்துவதே எங்களின் ஒரே இலக்கு”
எனக் கூறி உள்ளார்.