மதுரை:
கொடைக்கானல் ரோடுக்கு பதிலாக தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று முதல் திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

சென்னை எழும்பூர்-மதுரை இடையே பகல் நேரத்தில் தேஜஸ் சொகுசு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இது எழும்பூரில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு, மதுரைக்கு மதியம் 12.15 மணிக்கு சென்றடையும். அதேபோல் மறுமார்க்கமாக மதுரையில் இருந்து மதியம் 3 மணிக்கு புறப்பட்டு எழும்பூருக்கு இரவு 9.15 மணிக்கு வந்தடையும்.

எழும்பூரில் புறப்படும் இந்த சொகுசு ரெயில் திருச்சி, கொடைக்கானல் ரோடு ஆகிய 2 ரெயில் நிலையங்களில் மட்டும் நின்று மதுரை சென்றடையும். இந்தநிலையில் தேஜஸ் ரெயில் திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என தெற்கு ரெயில்வேக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.

இதையடுத்து கொடைக்கானல் ரோடுக்கு பதிலாக தேஜஸ் திண்டுக்கல்லில் நின்று செல்லும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தேஜஸ் ரெயில் திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் நின்று செல்ல ரெயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது. அதன்படி இன்று (2-ந்தேதி) முதல் அக்டோபர் மாதம் 2-ந்தேதி வரை 6 மாதம் சோதனை அடிப்படையில், கொடைக்கானல் ரோடுக்கு பதிலாக திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் தேஜஸ் ரெயில் நின்று செல்லும். அந்தவகையில் காலை 6 மணிக்கு எழும்பூரில் புறப்படும் ரெயில் 11.03 மணிக்கு திண்டுக்கல் ரெயில் நிலையம் வந்தடையும். பின்னர் 11.05 மணிக்கு திண்டுக்கல்லில் இருந்து மதுரைக்கு புறப்படும். அதேபோல், மறுமார்க்கமாக மதியம் 3 மணிக்கு மதுரையில் புறப்படும் தேஜஸ் ரெயில் 3.45 மணிக்கு திண்டுக்கல் ரெயில் நிலையம் வந்தடையும். பின்னர் 3.47 மணிக்கு திண்டுக்கலில் இருந்து எழும்பூருக்கு புறப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.