ராமேஷ்வரம்; தொழில்நுட்ப கோளாறு காரணமாக, பாம்பன் பாலத்தில் ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
ராமநாதபுரத்தில் அருகே உள்ள மண்டபத்தில் இருந்து ராமேசுவரம் தீவை இணைக்கும் வகையில் கடலுக்குள் பாலம் அமைக்கப்பட்டு உள்ளது. இதற்கு பாம்பன் பாலம் என பெயர். இது இந்தியாவின் முதல் கடல் பாலம் ஆகும். சுமார் 2.3 கி.மீ. நீளம் கொண்ட இப்பாலம் இந்தியாவின் இரண்டாவது மிக நீளமான கடல் பாலம் ஆகும் இந்த பாலத்தின் நடுவே பெரிய கப்பல்கள் போக்குவரத்துக்கு ஏற்றவாறு திறக்கும் கத்திரி வடிவ தூக்கு பாலமாக வடிவமைக்கபட்டு செயல்பட்டுவருகிறது.
இந்த பாலத்தில் ரயில்கள் செல்லும்போது, அதிர்வுகள் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் பாலத்தில் பொருத்தப்பட்டுள்ள சென்சார் கருவிகளும் பழுதாகி இருப்பதாகவும், பாலத்தில் விரிசல் ஏற்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுவதால், பாம்பலன் பாலத்தில், ரயில் போக்குவரத்து தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
பொதுவாக பாம்பன் ரெயில் பாலத்தில் அமைக்கப்பட்டுள்ள கர்டர்கள் கடல் காற்று காரணமாக அடிக்கடி துருப்பிடிப்பதும், அதை சரி செய்வதும் வழக்கமாக நடைபெற்று வருகிறது. இருந்தாலும், புயல் காலங்களில் பாம்பன் பாலத்தில் போக்குவரத்து நிறுத்தப்படும். இந்த நிலையில், சமீபத்தில் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, கடுமையான காற்று வீசியதுடன், கடலும் கொந்தளிப்பாக காணப்பட்டது. இந்த நிலையில், தற்போது பாம்பன் பாலத்தில் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளது.
இதனால், ராமேசுவரம்-மதுரை ரெயில் நேற்றுமுதல் ரத்து செய்யப்பட்டது. மதுரையில் இருந்து ராமேசுவரம் புறப்பட்ட ரெயில், மண்டபம் ரெயில் நிலையத்திலேயே நிறுத்தப்பட்டது. ராமேசுவரம்-கன்னியாகுமரி ரெயில் மண்டபம் வரை இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் சென்னையில் இருந்து நேற்று இரவு ராமேசுவரத்திற்கு வந்த ரெயில் இன்று அதிகாலை 4 மணிக்கு மண்டபம் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. அங்கிருந்து பயணிகள் பஸ், ஷேர் ஆட்டோக்கள் மூலம் ராமேசுவரம் சென்றனர்.
பாம்பன் ரெயில் பாலத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு குறித்து, மதுரையில் உள்ள ரெயில்வே அதிகாரிகளும், தொழில்நுட்ப அலுவலர்களும் அங்கு சென்று சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ‘ இன்று மாலைக்குள் தொழில்நுட்ப கோளாறு சரி செய்ய முடியாதபட்சத்தில் சென்னை, பெங்களூருவில் இருந்து அதிகாரிகள் வரவழைக்கப்படுவார்கள் என தெரிகிறது.