டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிடுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதன் காரணமாக, அவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கவுள்ள ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்கும் இந்திய அணிக்கு பயிற்சி அளிக்க செல்லமாட்டார் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஆசியக் கோப்பை டி20 தொடர் துபாயில் நடைபெற உள்ளது.  வரும் 27ம் தேதி ஆசியக் கோப்பை தொடங்குகிறது. வரும் 28ம் தேதி இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே டி20 போட்டி நடக்கிறது. இந்த போட்டியில் கலந்துகொள்ள இந்திய அணி  துபாய் செல்லும் நிலையில், இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால்,  இந்திய அணியுடன் டிராவிட் துபாய்  செல்லமாட்டார் என்று தெரிகிறது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறிய பிசிசிஐ மூத்த அதிகாரி, “ ராகுல் டிராவிட்டுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் தற்போது தனிமைப் படுத்தப்பட்டுள்ளார். விரைவில் குணமடைந்துவிடுவார் என நம்புகிறோம், குணமடைந்ததும், அணியிலும் இணைந்துவிடுவார் என்று கூறினார். கேஎல் ராகுல், தீபக் ஹூடா உள்ளிட்ட பெரும்பாலான வீரர்கள் மும்பையிலிருந்து இன்று ஐக்கி அரபு அமீரகம் புறப்பட்டுவிட்டனர். ஹராரேயிலிருந்து நேரடியாக துபாய்க்கு அக்ஸர் படேல் வந்துவிடுவார் என கூறியவர், அணியில் மற்ற வீரர்கள் அனைவரும் உடற்தகுதியுடன் உள்ளனர் என்றார்.

 மேலும் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தவர்,  ஜிம்பாப்பேயில் இருக்கும் விவிஎஸ் லட்சுமண் துபாய்க்கு செல்வாரா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்தவர்,  தேவைப்படும் பட்சத்தில் லட்சுமண் இந்திய அணிக்கு அழைக்கப்படுவார். அதுவரை மாம்பரே பயிற்சியாளராக இருப்பார் என்று கூறினார்.