சென்னை,
அரசு மற்றும் மாநகராட்சி கல்வி அதிகாரிகளின் அனுமதி பெறாமல் உயர் கல்வி படித்த 4,300ஆசிரியர்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க, அரசு உத்தரவிட்டு உள்ளது.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், பணியில் இருக்கும் போது, மேற்படிப்பு படிக்க விரும்பினாலோ, வெளி நாடு செல்ல பாஸ்போர்ட் எடுக்க முயன்றாலும், சொத்துகள் வாங்கவும் அரசிடம் முன் அனுமதி பெற வேண்டும் என்று சட்ட விதிகள் உள்ளது.
அனுமதி பெறாமல் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது ‘சஸ்பெண்ட், டிஸ்மிஸ்’ போன்ற நடவடிக்கை எடுக்கலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆனால், பெரும்பாலான ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சம்பள உயர்வை மட்டுமே நோக்கமாக கொண்டு தொலைதூரக் கல்வி மூலமும், பல தனியார் கல்வி நிறுவனங்கள் மூலம் பணம் கொடுத்தும் பட்டம் பெற்று வருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது.
அதேபோல பெரும்பாலான இடை நிலை கல்வி பயின்ற ஆசிரியர்கள் ஊதிய உயர்வை மட்டுமே எதிர்நோக்கி பிஎட், பிஏ, எம்.ஏ., போன்ற பட்ட மேற்படிப்புகள் தொலைதூர கல்வி மூலம் பயின்று பட்டம் பெற்று, அதன் காரணமாக ஊதிய உயர்வை பெற்றுவிடுகிறார்கள்.
இவ்வாறு பட்டம் பெறும் ஆசிரியர்களால் உயர்நிலை கல்வி மற்றும் மேல்நிலை கல்வி பாடங்களை மாணவ மாணவிகளுக்கு நடத்த இயலவில்லை. சம்பள உயர்வுக்காக இதுபோன்று பட்டம் பெற்று பதவி உயர்வு பெற்றுள்ள தகுதியில்லாத பட்டதாரி ஆசிரியர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல காலமாக குரல் எழுப்பப்பட்டு வந்தது.
இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி அரசு கோரியிருந்தது.
அதைத்தொடர்ந்து, தமிழக பள்ளிக்கல்வித் துறையில், தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றும், 4,300 ஆசிரியர்கள், தங்கள் துறையின் முன் அனுமதி பெறாமல் உயர் கல்வி படித்துள்ளதும், படித்து முடித்த பின் சம்பள உயர்வை கருத்தில்கொண்டு, தங்களது பட்ட படிப்பை ஏற்றுக்கொள்ளும்படி கடிதம் கொடுத்திருப்பதும் தெரிய வந்துள்ளது.
இது குறித்து, பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி, துறை செயலரிடம் அறிக்கை தாக்கல் செய்தனர்.
இதையடுத்து, முன் அனுமதி பெறாதவர்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுத்து, அதன் அறிக்கையை தாக்கல் செய்ய, தொடக்கக் கல்வி இயக்குனரகத்துக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
இது ஆசிரிய பெருமக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. தற்போது 7வது ஊதிய குழு அமல்படுத்தி உள்ள நிலையில், அதிக சம்பளத்தை எதிர்நோக்கி உள்ள ஆசிரியர்கள் இந்த பிரச்சினை காரணமாக, அரசு நடவடிக்கைகளில் இருந்து தம்பிக்கும் வகையில், தங்களது ஆசிரியர் சங்கங்கள் மூலம் அரசுக்கு நெருக்கடி கொடுத்து வருவதாக கூறப்படுகிறது.
தற்போதைய கல்வி வளர்ச்சியில், மாணவர்கள் திறமையான கல்வி பெறும் வகையில், இடைக்கல்வி என்னும் இரண்டாண்டு ஆசிரியர் பயிற்சி பெற்றும் கல்வி முறையை ரத்து செய்துவிட்டு, ஆசிரியர் பணி பெறும் திட்டத்தை மாற்றி அமைத்து, குறைந்த பட்சம் ஆசிரியராக பணியாற்ற பட்டதாரியுடன் பிஎட் பயிற்சி பெற்ற வர்களை மட்டுமே ஆசிரியர் பணிக்கு தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
திறமையான ஆசிரியர்கள் உருவானால் மட்டுமே திறமையான மாணவர்களையும் உருவாக்க முடியும்.