டில்லி:

சிரியர் தினத்தை முன்னிட்டு தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு ஆசிரியர்கள் உள்பட 46 ஆசிரியர் கள் சிறந்த ஆசிரியர்கள் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட நிலையில், அவர்களுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று விருதுகள் வழங்கி கவுரவித்தார்.

இந்தியாவின் முதல் குடியரசுத் துணைத் தலைவரும், இரண்டாவது குடியரசுத் தலைவருமான சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்தநாளை முன்னிட்டு நாடு முழுவதும் இன்று ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்த நாளில் சிறந்த ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த விருதுக்கு நாடு முழுவதும்  46 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் தமிழகத்தின், ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் உள்ள வைரவிழா உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் மன்சூர் அலி, கரூர் மாவட்டம் கே.பரமத்தி பஞ்சாயத்து யூனியன் தொடக்கப் பள்ளி ஆசிரியர் செல்வக்கண்ணன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், புதுச்சேரி வில்லியனூரை அடுத்த கூனிச்சம்பேடு பாவேந்தர் பாரதிதாசன் அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர் சசிகுமார் என்பவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இவர்களுக்கு டில்லியில் நடைபெற்ற விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விருது வழங்கி கவுரவித்தார்.