சென்னை
இன்று அட்சய திருதியை நாளில் தங்கம் விலை மேலும் உயர்ந்துள்ளது.
ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் அமாவாசைக்கு பிறகு வரும் வளர்பிறை திருதியை, அட்சய திருதியை நாளாக கடைபிடிக்கப்படுகிறது. அட்சய திருதியை அனைத்து நலன்களையும் அள்ளித் தரும் நாளாக இருப்பதாக மக்கள் நம்புகின்றனர். எனவே அட்சய திருதியை அன்று தங்கம் வாங்கினால், ஆண்டு முழுவதும் செல்வம் வந்து சேரும் என்ற நம்பிக்கை காலம் காலமாக மக்கள் மத்தியில் இருந்து வருகிறது.
இதனால் ஒவ்வொரு ஆண்டும் அட்சய திருதியை நாளில் நகைக்கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதும். பொதுமக்கள் தங்கம் விலை உயர்ந்தாலும்கூட, அட்சய திருதியை அன்று நகைகளை வாங்க விரும்புகின்றனர். இந்த ஆண்டு அட்சய திருதியை இன்று கொண்டாடப்படுகிறது.
நடப்பாண்டில் மார்ச் மாதம் முதலே தங்கத்தின் விலை கடும் உயர்வை சந்தித்து வருகிறது. ஒரு சில நேரங்க்ளில் தங்கத்தின் விலையில் குறைவு ஏற்பட்டாலும், மீண்டும் மீண்டும் விலை உச்சம் தொட்டு வருகிறது. அட்சய திருதியை தினமான இன்றும் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.53,280-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதாவது ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.45 உயர்ந்து ரூ.6,660-க்கு விற்பனையாகிறது. இன்று வெள்ளிகிராமுக்கு 1 ரூபாய் 30 காசுகள் அதிகரித்து 90 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.