சென்னை: கொரோனா தொற்று காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக வீட்டில் இருந்தே பணியாற்ற மென்பொருள் நிறுவனங்கள் உள்பட பல்வேறு நிறுவனங்கள் அனுமதி வழங்கிய நிலையில், தற்போது தொற்று பரவல் குறைந்துள்ளதால், மீண்டும் பணிக்கு வர அறிவுறுத்தி வருகின்றன. அதன்படி டிசிஎஸ் நிறுவனம் அனைத்து ஊழியர்களையும் மீண்டும் பணிக்கு வர உத்தரவிட்டு உள்ளது.

நாட்டின் மிகப்பெரிய ஐடி நிறுவனங்களில் ஒன்றான டிசிஎஸ் (டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்) நிறுவனம், தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து, அதன் ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதித்து வருகிறது. தற்போது கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட உள்ளதால், வீட்டில் இருந்தே வேலை செய்வதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

தனது நிறுவன  ஊழியர்களை இந்த ஆண்டு நவம்பர் 15 ஆம் தேதிக்குள் மீண்டும் அலுவலகத்திற்கு வருமாறு  அதிகாரப்பூர்வமாக கேட்டுக் கொண்டுள்ளது. பல நிறுவனங்கள் தற்போது வாரத்திற்கு ஒருநாள், இரண்டுநாள் என அலுவலகங்களுக்கு வரவைத்துள்ள நிலையில், டிசிஎஸ், நவம்பர் மாதம் 15ந்தேதிக்குள் அனைவரும் அலுவலகம் வர வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

டிசிஎஸ் ஊழியர்களில்  95 சதவீதத்துக்கும் அதிகமான ஊழியர்கள் பகுதியளவு தடுப்பூசியும், 70 சதவீதத்துக்கும் அதிகமானோர் முழுமையாக தடுப்பூசியும் போடப்பட் டிருப்பதால், நிறுவனம் ஊழியர்களை மீண்டும் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்து உள்ளது. தற்போதைய நிலையில் 25 சதவீத ஊழியர்கள் பணிக்கு வந்துகொண்டிருக்கும் நிலையில், அனைவரையும் அலுவலகம் வர அழைப்பு விடுத்துள்ளது.