மும்பை :
இந்தியாவின் மிகப் பெரிய ஐ.டி. கம்பெனியான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், அடுத்த ஐந்து ஆண்டுகளில் தனது ஊழியர்கள் அலுவலகத்தில் செலவழிக்கும் நேரத்தை கணிசமாகக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதை உயர் நிர்வாகிகள் கூறியதாக எகனாமிக் டைம்ஸ் (ET) செய்தி வெளியிட்டிருக்கிறது, கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவலுக்கு பின், நாட்டின் 147 பில்லியன் டாலர் அவுட்சோர்சிங் துறையில் இதுபோன்ற ஒரு முயற்சி நடைபெறுவதை அறிவிப்பதாக இது உள்ளது.
டி.சி.எஸ்-ன் தலைமை இயக்க அதிகாரி என். கணபதி சுப்பிரமணியம், “25 சதவீதத்திற்கும் குறைவான பணியாளர்களை கொண்டு 100% உற்பத்தி செயல்திறனை எங்களால் எட்டமுடியும்” என்று நிறுவனம் நம்புவதாக ET-க்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். ஒவ்வொரு ஊழியரும் அலுவலகத்தில் இருக்க வேண்டிய அவசியமில்லை என்று சுட்டிக்காட்டிய அவர், “இந்த பணியாளர்கள் 25% நேரத்தை எங்கள் அலுவலககத்தில் செலவிடுவதே போதுமானதாக இருக்கும்” என்றும் கூறினார்.
முன்னதாக ஐ.டி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்ய ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நாட்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கிவந்தது, ஆனால் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க ஒரே இரவில் அவர்களின் கொள்கைகளை மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட நாற்பது லட்சத்திற்கும் அதிகமான இந்திய ஐ.டி பணியாளர்களில் 80% க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கடந்த மார்ச் மாதத்திலிருந்து வீட்டில் இருந்து வேலை செய்வதற்கு மாறியுள்ளனர் அதோடு உலகளவில் பல வாடிக்கையாளர்களுக்கு சேவைகளை வழங்கி வருகின்றனர் என்று டி.சி.எஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ராஜேஷ் கோபினாதன் கூறினார். ஒரு சவாலான பணியை மேற்கொண்டுள்ள நிறுவனம் “2025 க்குள் 25/25 மாடலை செயல்படுத்த முடியும், அதுவே நமது எதிர்காலத் திறனையும் எதிர்கால உள்கட்டமைப்பையும் உருவாக்குவதற்கான வழி” என்று அவர் கூறினார். “இது உண்மையில் 25 சதமா அல்லது 50 சதமா என்பது தான் கேள்வி, ஆனால் ஒருபோதும் 100/100 ஆக இருக்காது (100% பணியாளர்களில் 100% பணியாளர்கள் 100% நேரம்).” டி.சி.எஸ். நிறுவனம் மார்ச் மாத இறுதியில் தான் 448,464 பேரை வேலைக்கு அமர்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
அதுபோல், இந்தியாவின் நான்காவது பெரிய ஐ.டி. நிறுவனமான விப்ரோ, தனது சேவையை 93 சதவீதத்திற்கும் மேலான பணியாளர்களை வீட்டிலிருந்து வேலை செய்வதன் மூலம் தொடர்ந்துவருகிறது. கொரோனா வைரஸ் காரணமாக உருவான நிலைமை சீரடைந்ததும் இந்தியா மற்றும் உலகம் முழுவதும் உள்ள அதன் அனைத்து தொழிலாளர்களும் அலுவலகங்களுக்கு திரும்பவரவேண்டுமா என்பதை மதிப்பீடு செய்து வருகிறது.
“அனைத்து பணியாளர்களும் மீண்டும் அலுவலகம் வர வேண்டுமா அல்லது ஊழியர்களை நிரந்தரமாக வீட்டிலிருந்து பணிபுரிய அனுமதிப்பதா? இதுபோன்ற நிறைய விஷயங்கள் குறித்து விவாதங்கள் நடந்து கொண்டிருக்கிறது ” என்று விப்ரோவின் தலைமை மனிதவள அதிகாரி சவ்ரப் கோவில் கூறினார். இதுபோன்ற மாற்றத்திற்கு வாடிக்கையாளர்களிடமிருந்து ஒப்புதல் பெற வேண்டும் என்பதால், விப்ரோ இன்னும் இறுதி முடிவு எதுவும் எடுக்கவில்லை என்றும் கூறினார்.
பிரிட்டிஷ் ஏர்வேஸ், ஜெனரல் எலக்ட்ரிக் மற்றும் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் போன்ற வாடிக்கையாளர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஊழியர்களை கொண்டு இந்திய ஐ.டி. நிறுவனங்கள், இந்தியாவில் உள்ள தங்கள் வளாகங்களுக்குள் இருந்தே சேவை செய்யும் திட்டத்தை இருபது ஆண்டுகளுக்கு முன்னரே அறிமுகப்படுத்தியது. இதுபோன்ற மையங்களில் பாதுகாப்பு நெறிமுறைகள் காரணமாக, அங்கீகரிக்கப்பட்ட ஊழியர்களை மட்டுமே முக்கியமான வாடிக்கையாளர் தரவை அணுக அனுமதிக்கின்றன.
இதுபோன்ற, வாடிக்கையாளர்களுக்காக பரந்த வளாகங்களை, ஆயிரக்கணக்கான அர்ப்பணிக்கப்பட்ட ஊழியர்களைக் கொண்டு, பெங்களூரு, புனே, ஹைதராபாத், நொய்டா மற்றும் சென்னை போன்ற நகரங்களில் இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் நடத்திவருகின்றன.
“ஐ.டி. பூங்காக்கள் ஒவ்வொன்றும் பலலட்சம் சதுரடிகளை கொண்ட ரியல் எஸ்டேட்டை நிர்வகிக்கின்றன. வீட்டிலிருந்து வேலை செய்யும் இத்தகைய மாற்றங்களால், ஐ.டி அலுவலகங்களுக்கான ரியல் எஸ்டேட் விலைகள் குறையக்கூடும் ”என்று எக்ஸ்பெனோவின் இணை நிறுவனர் கமல் கரந்த் கூறினார்.
வீட்டில் இருந்து வேலை (WFH) பார்ப்பதில் செயல்திறன் அதிகரித்திருப்பதாகவும், எதிர்காலத்திலும் இது பலனுள்ளதாக இருக்கும், என்றும் கரந்த் கூறினார். “உலகளாவிய சேவையில் உள்ள இந்திய நிறுவனங்களின் தலைவர்கள், தற்போது ஊழியர்கள் 70% அல்லது அதற்கு மேற்பட்ட உற்பத்தித்திறனில் பணியாற்றுவதாகக் கூறுகிறார்கள்.”
அனைத்து ஊழியர்களும் வீட்டிலிருந்து வேலை செய்வதன் மூலம் உற்பத்தித்திறனில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதால், அதன் 70% ஊழியர்களை வீட்டிலிருந்து செயல்பட அனுமதிக்க சொனாட்டா மென்பொருள் நிறுவனம் உத்தேசித்திருப்பதாக அதன் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்ரீகர் ரெட்டி தெரிவித்துள்ளார்.
“இருப்பினும், தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்கள் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் (SEZ) இயங்குவதற்கான வரி சலுகைகள் குறித்து தெளிவுபடுத்தப்பட வேண்டும். அதேநேரத்தில் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையும் முக்கியமானது, ” என்றார்.
இந்திய மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்களின் தேசிய சங்கம் (NASSCOM), கொரோனா வைரசின் தாக்கத்திற்கு பிறகு நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களையும் அவர்களின் பணியிடங்களையும் பற்றிய பார்வையை வெகுவாக மாறியிருப்பதாக கூறுகிறது.
“சாதாரணமான சூழலில், ஒருபோதும் இந்த அளவில் சோதனை செய்திருக்க முடியாது. 90 முதல் 95% ஊழியர்கள் தற்போது இதைச் செய்ய கொரோனா வைரஸ் கட்டாயப்படுத்தியுள்ளது, ”என்று NASSCOM-ன் தலைமை வழிகாட்டுதல் அலுவலர் சங்கீதா குப்தா கூறினார். “வரும் காலங்களில் வீட்டில் இருந்து வேலை செய்வோர் எண்ணிக்கை 25 சதவீதமா அல்லது அதற்கும் மேலா என்பதை விட, அலுவலகம் மற்றும் வீடு இரண்டிலும் இருந்து வேலை செய்யக்கூடிய ஒரு கலவையாக இருக்கும் என்பது தான் யதார்த்தம்”
நன்றி : Economic Times