டெல்லி: இந்தியாவில் கொரோனா சிகிச்சைக்காக 755 மருத்துவமனைகள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இணைச் செயலாளர் லாவ் அகர்வால் இன்று   செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க நாடு முழுவதும் 755 மருத்துவமனைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தியாவில்  கடந்த 24 மணி நேரத்தில், 1334 கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தமாக இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 15,712 ஆக அதிகரித்து உள்ளது. பலியானோர் எண்ணிக்கை  519 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து குணமானவர்களின் எண்ணிக்கை  2301 ஆக உயர்ந்துள்ளது.

புதுச்சேரியின் மாஹே, கர்நாடகாவின் குடகு ஆகிய பகுதிகளில் 28 நாட்களில் புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என்று கண்டறியப்பட்டு உள்ளது. கட்டுப்பாடு விதிக்கப்பட்ட பகுதிகளில் ஊரடங்கில் தளர்வு கிடையாது.

மற்ற பகுதியில் சில விதிமுறைகளுடன் தளர்வு இருக்கும். 14 நாட்களில், 23 மாநிலங்களில் உள்ள 54 மாவட்டங்களில் யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை என்றார்.