டில்லி
டாடா டெலிகாம் நிறுவனம் தனது சேவையை விரைவில் நிறுத்திக் கொள்ள இருப்பதாக அரசுக்கு தெரிவித்துள்ளது.
டாடா குழுமத்துக்கு சொந்தமான டாடா டெலிகாம் நிறுவனம் 1996ல் லேண்ட் லைன்களுடன் ஆரம்பிக்கப்பட்டது. பிறகு 2002ல் தனது சி எம் டி ஏ சேவைகளை தொடங்கியது. அதன் மூலம் லேண்ட் லைன்கள் மூலமும் மொபைல் மூலமும் சேவையை தொடர்ந்தது. ஆரம்பத்தில் ரிலையன்சுக்கு போட்டியாக டாடா இருந்தது குறிப்பிடத் தக்கது. பிறகு 2008 முதல் ஜி எஸ் எம் சேவையிலும் கால் பதித்தது. உலகப் புகழ்பெற்ற தொலை தொடர்பு நிறுவனமான டொகோமோ நிறுவனத்துடன் இணைந்து டாடா டொகோமோ என்னும் கூட்டு நிறுவனத்தின் மூலம் மொபைல் சேவைகள் தொடர்ந்தன. டொகோமோ டாடாவுடனான வர்த்தக தொடர்பை 2014ல் முறித்துக் கொண்டது.
தற்போது டாடா டெலிகாம் இணைப்புகள் வெகுவாக குறைந்து வருகின்றன. சந்தையில் உள்ள மற்ற நிறுவனங்களுடன் டாடாவால் போட்டியிட முடியவில்லை. இதனால் தனது டாடா டெலிகாம் நிறுவனத்தை மூட இருப்பதாக அரசுக்கு டாடா குழுமம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக டாடா டெலிகாம் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஸ்ரீநாத் மற்றும் குழுமத்தின் பொருளாதார அலுவலர் சவுரப் அகர்வால் இருவரும் தொலைதொடர்பு இயக்குனரை சந்தித்துள்ளனர். அப்போது டாடா வசம் உள்ள ஸ்பெக்ட்ரம் (அரசால் அளிக்கப்பட்டது மற்றும் டாடாவால் மற்றவர்களிடம் இருந்து வாங்கப்பட்டது) முழுமையும் எவ்வாறு திரும்ப அளிப்பது என்பது குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பெயர் தெரிவிக்க விரும்பாத ஒரு டாடா அதிகாரி, “டாடா டெலிகாம் நிறுவனம் இப்போது இருக்கும் நிலையில் மூடுவதன் மூலம் நஷ்டங்கள் தொடர்வதை தவிர்க்க எண்ணியுள்ளது. ஏலத்தில் எடுக்காமல் அரசு அளித்த ஸ்பெக்ட்ரம் யூனிட்டுகளை அரசுக்கே திரும்ப அளித்தால் நிறுவனத்துக்கு எந்தத் தொகையும் திரும்பக் கிடைக்காது. எனவே அதை தனியாருக்கு விற்றால் மட்டுமே கொடுத்த தொகையையாவது திரும்ப பெற முடியும். அப்படி விற்க முடியாவிட்டால் இது வரை செலுத்திய தொகையும் நஷ்டக்கணக்கில் ஏறி விடும்.
மூன்று வருடங்களுக்கு முன்பு டொகோமோ விலகிக் கொள்வதாக அறிவித்ததில் இருந்தே இந்த நிறுவனம் பின்னடைவை சந்தித்து வருகிறது. இதனால் டாடா நிறுவனம் ரூ.7000 கோடி நஷ்டம் அடைந்துள்ளது. அதை ஈடுகட்ட அந்தப் பணத்தை டாடா டெலிகாம் நிறுவனத்துக்கு, டாடா குழுமம் அளித்தாக வேண்டும். ஆனால் டாடா குழுமம் அந்தப் பணத்தை அளிக்க விரும்பவில்லை. அதனால் டாடா டெலிகாம் சேவையை வேறு ஏதாவது தொலை தொடர்பு நிறுவனத்துக்கு விற்று விட எண்ணி உள்ளது. இது குறித்து வோடோஃபோன் மற்றும் பாரதி ஏர்டெல் ஆகிய நிறுவனங்களுடன் பேச உள்ளது.” என தெரிவித்தார்.
டாடா குழுமம் கடந்த 149 வருடங்களாக இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் மூடப்பட்டால் டாடாவின் வரலாற்றிலேயே முதன் முதலாக மூடப்படும் பெரிய தொலை தொடர்பு நிறுவனங்களில் ஒன்றாகும்.