டாடா சன்ஸ் மற்றும் டாடா குழும நிறுவனங்களின் தலைவராக உள்ள என். சந்திரசேகரின் பதவிக்காலம் மூன்றாவது முறை நீட்டிக்கப்படும் என்று தி எக்கனாமிக் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) அனுபவமுள்ள என். சந்திரசேகரன், 2016-ஆம் ஆண்டு அக்டோபரில் டாடா சன்ஸ் குழுவில் சேர்ந்தார் இதையடுத்து ஜனவரி 2017 இல் இக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

2022 பிப்ரவரியில் இவருக்கு இரண்டாவது ஐந்தாண்டு பதவிக்காலம் வழங்கப்பட்டது.

டாடா குழும நிறுவன விதிகளின்படி நிர்வாக பொறுப்புள்ள தலைவர்கள் 65 வயதில் ஓய்வு பெறுவார்கள், தேவைப்பட்டால் நிர்வாகப் பொறுப்பற்ற பதவிகளில் 70 வயது வரை நீடிக்கலாம்.

இந்த விதி, நோயால் டாடா உள்ளிட்ட அனைவருக்கும் பின்பற்றப்பட்ட நிலையில், கடந்த ஐந்து ஆண்டுகளில் டாடா நிறுவனம், ஏர் இந்தியா, மின்சார வாகனங்கள் மற்றும் செமி-கண்டக்டர் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அதிக முதலீடு செய்துள்ளதால் என். சந்திரசேகரின் பதவிக்காலம் மூன்றாவது முறை நீடிக்கப்பட வேண்டும் என்று கடந்த மாதம் நடைபெற்ற டாடா டிரஸ்ட்ஸ் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

1963 ஜூன் மாதம் பிறந்த என். சந்திரசேகர் 2027 பிப்ரவரி மாதம் தனது இரண்டாவது பதிவிக்காலத்தை நிறைவு செய்யும் போது 65 வயதை எட்டிப்பிடிக்க உள்ளதை அடுத்து அவரது பதவி நீட்டிப்பு குறித்து நோயால் டாடா மற்றும் வேணு சீனிவாசன் ஆகியோர் தலைமையில் செப்டம்பர் 11 அன்று நடந்த டாடா டிரஸ்ட்ஸ் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் முன்மொழியப்பட்டது.

அறக்கட்டளையின் தீர்மானம் டாடா சன்ஸ் நிறுவனத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் ஒப்புதலை அடுத்து அவர் பதவி நீட்டிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

ஓய்வு பெறும் வரம்பைத் தாண்டி ஒரு குழு நிர்வாகி செயலில் நிர்வாகப் பணியில் இருப்பது இதுவே முதல் முறையாகும்.

என். சந்திரசேகரன் தலைமையில், டாடா குழுமம் கடந்த ஐந்து ஆண்டுகளில் வருவாயை கிட்டத்தட்ட இரட்டிப்பாக்கியது மற்றும் நிகர லாபம் மற்றும் சந்தை மூலதனத்தை மூன்று மடங்கிற்கும் மேலாக அதிகரித்தது, அது ₹5.5 லட்சம் கோடியை செலவிட்டது. பட்டியலிடப்பட்ட மற்றும் பட்டியலிடப்படாத அனைத்து நிறுவனங்களிலிருந்தும் வருவாய் ₹15.34 லட்சம் கோடியாக இருந்தது, நிகர லாபம் ₹1.13 லட்சம் கோடியாக இருந்தது.

இருப்பினும், கடந்த ஆண்டில், குழுமத்தின் சந்தை மூலதனம் அக்டோபர் 10, 2025 நிலவரப்படி கிட்டத்தட்ட ₹6.9 லட்சம் கோடி குறைந்து ₹26.5 லட்சம் கோடியாகக் குறைந்துள்ளது, இது டாடா குழுமத்தின் மிகப்பெரிய நிறுவனமான டிசிஎஸ் பங்கு விலையில் கிட்டத்தட்ட 30% சரிவால் ஏற்பட்டது.

அவரது பதவிக்காலத்தில், டாடா சன்ஸ் நிறுவனத்தின் நிகர மதிப்பு 2018 இல் ₹43,252 கோடியிலிருந்து ₹1.49 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

அறக்கட்டளையின் முடிவு சந்திரசேகரனின் தலைமைத்துவத்தையும், கூட்டு நிறுவனத்தில் சிக்கலான பங்குதாரர்கள் மற்றும் கட்டமைப்பு மாற்றங்களுக்கு மத்தியில் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்கான விருப்பத்தையும் குறிக்கிறது.