டெல்லி: 1932ல் விமான நிறுவனத்தை தொடங்கிய டாடா குழுமம், மீண்டும் 2021ல் மீண்டும் கைப்பற்றி உள்ளது டாடா நிறுவனம். வாழ்க்கை ஒரு வட்டம் என்பது டாடா நிறுவனத்தின்  விவகாரத்தில் உறுதியாகி உள்ளது.  ஏர் இந்தியா நிறுவனத்தை திரும்ப்பப்பெற்றால் மகிழ்வேன் என ரத்தன் டாடா ஏற்கனவே ஆசைப்பட்ட நிலையில், அவரது ஆசை நிறைவேற்றி உள்ளது. தனது தாத்தா தொடங்கிய டாடா ஏர்லைன்ஸ் நிறுவனத்தை மீண்டும் கைப்பற்றியுள்ளார் பேரன் ரத்தன் டாடா.

நஷ்டத்தில் இயங்கி வரும் ஏர் இந்தியா விமானத்தை மோடி தலைமையிலான மத்தியஅரசு விற்பனை செய்யப்போவதாக  கடந்த 2016ம்ஆண்டு அறிவித்தது.  70 சதவிகித பங்குகளை விற்பனை செய்வதாக அறிவித்தது. தொடர்ந்து,  ஏர் இந்தியா விமான நிறுவனத்தை ஏலம் விடுவதற்கான  பணிகளை மேற்கொண்டது.

தொடக்கத்தில் ஏர் இந்தியா விமான நிறுவனத்தை வாங்க பல வெளிநாட்டு நிறுவனங்கள் முன்வந்த நிலையில், டாடாவும் களமிறங்கியது. தங்களால் தொடங்கப்பட்ட ஏர் இந்தியா விமானம் மற்றவர்களின் கைகளுக்கு சென்றுவிடக்கூடாது என்ற ஆதங்கத்தில், மற்ற நிறுவனங்களுக்கு போட்டியாக டாடா நிறுவனம் ஏலத்தில் பங்கேற்றது.  ஆனால், இந்திய அரசின் பல்வேறு கட்டுப்பாடுகளால், பல நிறுவனங்கள் ஏலத்தில் இருந்து வெளியேறியதால், டாடா நிறுவனம் மட்டுமே போட்டியில் நீடித்தது. இந்த நிலையில், தற்போது ஏர் இந்தியா விமான ஏலம் டாடாவுக்கு சென்றுள்ளது.

இதனால், சுமார் 89ஆண்டுகளுக்கு பிறகு, ஏர் இந்தியா விமான நிறுவனம் டாடா நிறுவனத்தின் கைகளில் சென்றுள்ளது. ரத்தன் டாடாவின் கனவு நிறைவேறி உள்ளது.

ஏர் இந்தியா விமான நிறுவனம் – ஒரு பார்வை….

இந்தியாவின் பிரபல தொழில்நிறுவனங்களில் ஒன்றான டாடா நிறுவனம் 1932ம் ஆண்டில் டாடா ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தை  நிறுவி சேவையாற்றி வந்தது.  புகழ்பெற்ற தொழிலதிபர் ஜே.ஆர்.டி. டாடா இந்த நிறுவனத்தை உருவாக்கினார். இவர், இந்தியாவின் முதல் உரிமம் பெற்ற விமானி என்பது பெருமைக்குரியது.

1947 இல் இந்தியா சுதந்திரம் பெற்றதும், ஏர் இந்தியா விமான நிறுவனம் தேசியமயமாக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.  பின்னர், 1953ம் ஆண்டு ஏர் இந்திய விமானம் இந்திய அரசால் தேசியமயமாக்கப்பட்டது. “ஏர் இந்தியாவை அரசு கையகப்படுத்தியபோது, அவர்கள் டாடாவுக்குக் குறைந்த விலையில் கொடுத்தனர். அதற்கு  ஜே.ஆர்.டி. டாடா  இந்திய அரசிடம் இருந்து  இழப்பீடாக பெரும் தொகையை எதிர்பார்க்கவில்லை என்று பெருந்தன்மையாக கூறினார்.

இதையடுத்து, இந்திய அரசின் விமான இயக்குனரகம், ஏர் இந்தியா விமான நிறுவனத்தை நடத்தி வருகிறது. ஆனால், உலக நாடுகளின் வளர்ச்சி, விமான நிறுவனங்களுக்கு இடையேஏற்பட்டுள்ள போட்டி, தொழில்நுட்ப வளர்ச்சியால் ஏராளமான விமான நிறுவனங்கள் உருவான நிலையில், அரசின் ஏர் இந்திய  விமான நிறுவனம்,  தனியார் விமான நிறுவனங்களுக்கு ஈடுகொடுக்க முடியாததால், பெரும் நஷ்டத்தை எதிர்கொண்டது.

இதையடுத்து, கடனில் மூழ்க்கி தவித்த நிறுவனத்தை மீட்கும் வகையில், பாஜக ஆட்சிக்கு வந்ததும், 2016ம ஆண்டு ஏர் இந்தியாவின் பங்குகளை விற்பனை செய்ய முன்வநத்து. ஏர் இந்தியாவை தனியார் மயமாக்க மத்திய அரசு முயற்சி எடுத்தது. ஆனால், இந்த பங்குகளை வாங்க பல நிறுவனங்கள் முன்வரவில்லை. ஆனால் டாடா நிறுவனம் முன்வந்தது.  டாடாவின் விஸ்தாரா ஏர் இந்தியாவை வாங்கும் முயற்சி எடுத்தது. (விஸ்தாரா என்பது டாடா மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்சுடனான கூட்டு நிறுவனமாகும்)

இதற்கிடையில், சிங்கப்பூர் நிறுவனம் விருப்பம் காட்டாததால், டாடா குழுமம் தனியாகவே ஏர் இந்தியாவை வாங்க முயற்சி எடுத்தது. இதுகுறித்து டாடா  குழுமத்தின் சேர்மன் சந்திரசேகரன் மத்திய அரசு வசம் உள்ள 51 சதவிகிதம் ஏர் இந்திய நிறுவனப்பங்குகளை பெற விருப்பம் தெரிவித்துள்ளதாக ஊடகங்களில் தெரிவித்திருந்தார்.

இதற்கிடையில், கொரோனா தொற்று காரணமாக விமான நிறுவனங்கள் கடுமையான இழப்பை சந்தித்ததால், ஏர் இந்தியா விமான நிறுவன ஏலம் திட்டமிட்டபடி நடைபெறுமா என்ற கேள்வியும் எழுந்தது. ஏனென்னாறல், ஏற்கனவே கடுமையான நிதிச்சிக்கலில் தவித்து வந்த ஏர் இந்தியா நிறுவனம், கொரோனா காலக்கட்டத்தில், மேலும் நெருக்கடியை சந்தித்துள்ளதாகவும், ஏர்இந்தியா மீதான கடன் ரூ.10ஆயிரம் கோடியை தாண்டியதாக கூறப்பட்டது.

இதற்கிடையில்  ஏர் இந்தியா விமான நிறுவனம் ஏலத்திற்கான கடைசி தேசி ஆகஸ்டு 31ந்தேதியுடன் முடிவடைய இருந்தது. ஆனால், மேலும் ஒரு மாதம் ஏலத்திற்கான அவகாசம் வழங்கப்பட்டது. அதன்படி, ஏலத்திற்கான இறுதிஅவகாசம் நேற்றுடன் (செப்டம்பர் 30ந்தேதி) முடிவடைந்தது.

இந்த ஏலத்தில், ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்க வேறு எந்த ஒரு நிறுவனமும் முன்வராததால், ஏலத்தில் கலந்துகொண்ட டாடா நிறுவனத்துக்கே ஏலம் கிடைத்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கெனவே ரூ.24 ஆயிரம் கோடி அளவிலான பங்குகளை ஏர் இந்திய நிறுவனத்தில் கொண்டுள்ள டாடா குழுமம் மேலும் 30 ஆயிரம் கோடி ரூபாய் செலுத்தி ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து ஏர் இந்தியா நிறுவனத்தின் கடன் தள்ளுபடி, ஊழியர்களின் பணிப் பாதுகாப்பு உள்ளிட்டவைகள் குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுமார் 89ஆண்டுகளுக்கு முன்பு தனது தாத்தாவால் தொடங்கப்பட்ட விமான நிறுவனத்தை மீண்டும் கைப்பற்றியதில், ரத்தன் டாடா பெரு மகிழ்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. வாழ்க்கை ஒரு வட்டம் என்பதைப்போல, தங்களால் தொடங்கப்பட்ட நிறுவனத்தை மீண்டும் தாங்களே நிர்வகிக்கும் உரிமையை டாடா நிறுவனம் பெற்றுள்ளது பெருமைக்குரியதே…