சென்னை: கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள சென்னையில் இன்று  டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவுள்ள நிலை யில் கமல்ஹாசன் அதனை கடுமையாக விமர்சித்தும், ஸ்டெர்லைட் வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில், அதுகுறித்தும் டிவிட் பதிவு  செய்துள்ளார்.

காய்கறி வாங்கச் சென்றவருக்கு கொரோனா வரும்போது, மதுக் கடைகளில் மது வாங்க செல்வோருக்கு கொரோனா வராதோ? என கமல்ஹாசன் கேள்வி எழுப்பி உள்ளார்.

சென்னை மற்றும் புறநகர் பகுதி மற்றும் சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் இன்றுமுதல் மதுக்கடைகள் செயல்பட தமிழகஅரசு அனுமதி வழங்கி உள்ளது. அதன்படி காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும். மேலும், ஒரு நாளைக்கு 500 டோக்கன்கள் மட்டுமே நுகர்வோருக்கு வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் தினசரி ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டு வரும் நிலையில், டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.  அரசுக்கு பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், பொதுமக்கள் என அனைவரும் விமர்சித்து வருகின்றனர்.

இந்த நிலையில், நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள டிவிட் பதிவில்,

காய்கறி வாங்கச் சென்றவருக்கு கொரோனா, வழிபாட்டுத் தலம் சென்றவருக்கும் கொரோனா, பணியிடத்தில் மருத்துவர், செவிலியர், காவலர் என எங்கும் கொரோனா என்று அரசு கூறுகிறது. மதுக் கடைகளில் மட்டும் இன்னும் கொரோனா தென்படாததால் சென்னையில் நாளை திறக்கப்படுகிறதா சாராய அணைக்கட்டின் மதகுகள்?

என கடுமையாக சாடியுள்ளார்.

அதுபோல தூத்துக்குடி ஸ்டெர்லைட் வழக்கின்தீர்ப்பு இன்று வெளியாக உள்ள நிலையில், அதுகுறித்தும் டிவிட் போட்டுள்ளார்.

அதில், ஸ்டெர்லைட் வழக்கில் தீர்ப்பு. நீதியை நம்புகிறோம். நாளை நமதாகவே இருக்கும் என நம்பும் பல கோடி மக்களின் எண்ணப் பிரதிபலிப்பாக… உங்கள் நான்.