புதுச்சேரி:

புதுச்சேரி சோரியாங்குப்பம் பகுதியில் மதுக்கடைகளை எதிர்த்து மக்கள் போராட்டம் நடத்திவருகறார்கள்.

தமிழக எல்லையில் உள்ள புதுச்சேரியைச் சேர்ந்த பகுதி சோரியாங்குப்பம். இங்கு ஏற்கெனவே மதுக்கடை மற்றும் சாராயக்கடைகள் உள்ளன. தமிழக பகுதிகளில் பல மதுக்கடைகள் மூடப்பட்டதை அடுத்து, சோரியாங்குப்பம் பகுதியில் மேலும் சில மது மற்றும் சாராயக்கடைகள் திறக்கப்பட்டது.

இதனால், தமிழக குடிமகன்கள், சோரியாங்குப்பம் பகுதிக்குச் சென்று மது அருந்துவதும், பலர் அங்கேயே மயங்கி விழுவதும் நடக்கிறது. சில குடிமகன்கள், அந்த பகுதி பெண்களை கேலி கிண்டல் செய்வதும் தொடர்ந்து நடந்துவந்தது.

இதனால் இப்பகுதியில் உள்ள மது மற்றும் சாராயக்கடைகளை அகற்ற வேண்டும் என்று புதுச்சேரி அரசுக்கு இப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை மனு அளித்துவந்தனர்.  ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில் இன்று மக்கள் ஒன்று திரண்டு பத்து மது மற்றும் சாராயக்கடைகள் மீது தாக்குதல் நடத்தினர். சில கடைகள் சூறையாடப்பட்டன. ஒரு கடை எரிக்கப்பட்டது.

இதையடுத்து விரைந்தவந்த காவல்துறையினர் தடியடி நடத்தி மக்களை கலைக்க முயன்றுகொண்டிருக்கிறார்கள்.