டில்லி,
தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளில் அகற்றக்கூறி மார்ச் 31ந்தேதி உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு கூறியது.
அதைத்தொடர்ந்து ஏராளமான மதுக்கடைகள் நாடு முழுவதும் மூடப்பட்டது. நெடுஞ்சாலைகளுக்கு 500 மீட்டர் சுற்றளவில் உள்ள அனைத்து மதுக்கடைகளும் மூடப்பட்டது.
இந்நிலையில், மீண்டும் மதுக்கடைகளை திறக்க உச்சநீதி மன்றம் அனுமதி வழங்கி உள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளை ஊரக சாலைகளாக மாற்ற தடை விதிக்க கோரிய வழக்கில், உச்ச நீதி மன்றம் இந்த தீர்ப்பு வழங்கி உள்ளது.
இதை எதிர்த்து தொடரப்பட்ட தமிழகம் உள்பட ஒருசில மாநிலங்கள் சார்பாக மேல்முறையீடு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. ஏற்கனவே நடைபெற்ற விசாரணையின்போது, தமிழக அரசு சார்பாக வாதாடிய வழக்கறிஞர், தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூடுவதற்கான பரப்பளவை 500 மீ-ல் இருந்து 100 மீ-ஆக குறைக்க வேண்டும் என்று கோரினார்.
உச்சநீதி மன்றத்தின் உத்தரவு காரணமாக தமிழகத்தில் 1,731 மதுக்கடைகளை மூட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாகவும், மது விற்பனை, வரி மூலம் தமிழக அரசுக்கு கிடைக்கும் ரூ.25,500 கோடி வருமானம் கிடைப்பதாகவும், உச்சநீதி மன்றம் மதுக்கடை களை மூட உத்தரவிட்டால், தமிழகத்தின் வருமானம் பாதிக்கும் என்றும் வாதிட்டது.
அதற்கு பதிலளித்த நீதிபதிகள், மாநில அரசு வருமானம் ஈட்டுவதற்காக வேறு வழிகளை கண்டறிய வேண்டும், மதுக்கடைகளை மட்டுமே நம்பியிருக்க கூடாது என்றும், மாநில அரசுக்கு வருமானம் பாதிக்கப்படுகிறது என்பதற்காக பொதுமக்கள் உயிரை பணயம் வைக்க முடியுமா? என்றும் உச்சநீதி மன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பி இருந்தனர்.
அதைத்தொடர்ந்து நெடுஞ்சாலைகளை ஊரக சாலைகளாக மாற்றி மதுக்கடைகள் தொடங்கப்பட்டது. இதை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கில், ஊரக சாலைகளாக மாற்றி டாஸ்மாக் கடைகள் திறப்பதற்கு தடை இல்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதன் காரணமாக மதுக்கடைகள் மீண்டும் நெடுஞ்சாலைகளில் திறப்பது உறுதியாகி உள்ளது.