சென்னை:
கொரோனா ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகள் இன்று திறக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட  தமிழகமெங்கும் திமுக கூட்டணி கட்சிகள்  கருப்பு சட்டை, மற்றும் கருப்பு பேட்ஜ், கருப்புக்கொடியுடன் சமூக விலகளுடன் தங்களது வீட்டு வாயிலின் முன்பு போராட்டம் நடத்தினர்.

40நாட்களுக்கு பிறகு இன்று டாஸ்மாக் கடைகளை திறக்க அதிமுக அரசு உத்தரவிட்டது. ஏற்கனவே கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்கள் மேலும் பாதிப்புக்கு உள்ளாக நேரிடும் என கூறி, டாஸ்மாக் கடைகளை திறக்கக்கூடாது என எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.
ஆனால், ஆளும் அதிமுக அரசு, விடாப்பிடியாக இன்று டாஸ்மாக் கடைகளை திறந்துள்ளது. இதையடுத்து திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் இன்று அவரவர்கள் வீடு முன்பு கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி இன்று அ.தி.மு.க அரசினை எதிர்த்து கருப்புச் சின்னம் அணிந்து தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் அவரவர் வீடுகளுக்கு முன்பு கருப்புக்கொடியுடன் கோஷம் எழுப்பினர்.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், துர்கா ஸ்டாலின் ஆகியோர் ஆழ்வார்பேட்டையில் உள்ள ஸ்டாலின் வீடு முன்பு கருப்புக்கொடியுடன் கோஷம் எழுப்பினர்.
மேலும்,  நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி, தயாநிதி மாறன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, இந்திய மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர்கள் முத்தரசன், கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களும், மாவட்ட தலைநகரங்களில் கழக நிர்வாகிகள் என அனைவரும் டாஸ்மாக் திறப்பு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.