சென்னை:
மிழகத்தில் பொதுமுடக்கம் முடியும்வரை டாஸ்மாக் கடைகளை மூட சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதை எதிர்த்து, தமிழகஅரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்யப்பட்டு உள்ளது.

கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில் அமல்படுத்தப்பட்ட ஊரட்ங்கு  மே 17 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கடந்த 7ந்தேதி தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு மண்டலங்களைத் தவிர மற்ற இடங்களில்  மதுக்கடைகளைதிறக்க தமிழகஅரசு உத்தரவிட்டது.
இதை எதிர்த்து தொடரப்பட்ட பல்வேறு பொதுநல வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதி மன்றம், கடந்த 6ந்தேதி விசாரணையின்போது, தடை விதிக்க மறுத்துவிட்டது.  இதையடுத்து,  கடந்த 2 நாட்களாக டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு விற்பனையும் சக்கைப்போடு போட்டு வந்தது.
இந்த நிலையில், மேலும் பல பொதுநல வழக்குகள் நேற்றும் சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடரப்பட்டது. அதை விசாரித்த சென்னை உயர்நீதி மன்றம், பொது ஊரடங்கு முடியும் மே 17ந்தேதி வரை தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்க தடை விதிப்பதாகவும், ஆனால், ஆன்லைனில்  மதுபானங்களை விற்பனை செய்யலாம் என்று உத்தரவிட்டது.

இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தவை எதிர்த்து, டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் உச்சநீதி மன்றத்தில் இன்று மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது. அந்த மனுவில்,  ‘உயர்நீதி மன்றம் உத்தரவிட்ட விதிமுறைகளை அமல்படுத்தி மது விற்கப்பட்டது. ஒரு சில இடங்களில் விதிமீறல்களை அமல்படுத்தி ஒட்டுமொத்த டாஸ்மாக் கடைகளையும் மூடுவதற்கு உத்தரவிட்டது ஏற்புடையதல்ல என்றும், தமிழகத்தில் மதுக்கடைகளை திறக்க அனுமதி வழங்க வேண்டும் என்றும், டாஸ்மாக் கடைகளை மூடுவதால் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது, அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றங்கள் தலையிட வேண்டியதில்லை எனவும் தமிழக அரசு தனது மனுவில் குறிப்பிட்டுள்ளது.
இந்த மனுமீதான விசாரணை விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அண்டை மாநிலங்களில் மதுவிற்பனை நடக்கும் போது தமிழகத்தில் விற்க உச்சநீதி மன்றம் பச்சைக்கொடி காட்டுமா? சிவப்புகொடி காட்டுமா என்பது ஓரிரு நாளில் தெரிய வரும்…