சென்னை

மிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரூ.610 கோடி அளவில் மது விற்பனை நடந்துள்ளது.

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூலம் அரசு மது விற்பனை செய்து வருகிறது.  இந்த கடைகளில் சராசரியாக மது விற்பனை ரூ.80 கோடி முதல் ரூ.90 கோடி வரை நடக்கிறது..  தீபாவளி, பொங்கல், மற்றும் ஆங்கில புத்தாண்டு தினங்களில் மது விற்பனை அதிகமாக இருப்பது வழக்கமாகும்.   இந்த வருடம்  புத்தாண்டு சமயத்தில் இரு தினங்களுக்கு ரூ. 315 கோடிக்கு மது விற்பனை ஆனது.

தற்போது பொங்கல் பண்டிகை மூன்று நாட்களில் மொத்த  மது விற்பனை ரூ.610 கோடியை எட்டி உள்ளது.  இது கடந்த ஆண்டைவிட 10% அதிக விற்பனை ஆகும்.  கடந்த 14 ஆம் தேதியான போகிப் பண்டிகை அன்று ரூ.179 கோடிக்கு மது விற்பனை ஆகி உள்ளது.   அதற்கு அடுத்த நாளான 15 ஆம் தேதி பொங்கல் அன்று ரூ.254 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது.

இந்த மாதம் 16 ஆம் தேதி திருவள்ளுவர் தினத்தையொட்டி மதுக்கடைகள் மூடப்பட்டிருந்தன.  அதை ஈடு செய்யும் வகையில் பல குடிமகன்கள் பொங்கல் அன்றே வாங்கி ஸ்டாக்கில் வைத்து விட்டதாகக் கேள்வி.   கடந்த 17 அன்று கணும் பொங்கல் அன்று ரூ.175 கோடி வரை மது விற்பனை ஆகி உள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.

இந்த ஆண்டு பொங்கல் சமயத்தில் திருச்சி மண்டலத்தில்  மட்டும் ரூ. 143 கோடி அளவுக்கு மது விற்பனை ஆகி முதல் இடத்தை பிடித்துள்ளது.   அடுத்ததாகச் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் இணைந்த சென்னை மண்டலத்தில் ரூ.105 கோடி விற்பனை ஆகி இரண்டாம் இடத்தில் உள்ளது.