சென்னை: தமிழ்நாட்டில் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில், டாஸ்மாக் விற்பனையில் சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், தற்போதைய டாஸ்மாக் துறை அமைச்சர் அமைச்சர் முத்துசாமி இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார். இதில், டாஸ்மாக் விற்பனையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.
டாஸ்மாக் மதுவிற்பனையில் முறைகேடு நடைபெற்றது தொடர்பாக அமைச்சர் செந்தில்பாலாஜி மீது ஏராளமான புகார்கள் குவிந்துள்ளது. இதனால், அவர் பத்துரூபா பாலாஜி என்று அழைக்கப்பட்டார். பின்னர் அவர்மீதான அமலாக்கத்துறை விசாணையைத் தொடர்ந்து, அவரது துறைகள் பறிக்கப்பட்டு, துறையில்லாத அமைச்சராக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது துறை மற்ற அமைச்சர்களுக்கு பிரித்து வழங்கப்பட்டது. தற்போது, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறையை அமைச்சர் முத்துசாமி பராமரித்து வருகிறார்.
இந்த சூழலில், கடந்த மாதம் 22ந்தேதி ( 22.6.2023) அன்று முதல் மாநிலம் முழுவதும் 500 டாஸ்மாக் மூட தமிழ்நாடு அரசு திடீரென உத்தரவு பிறப்பித்தது. மேற்படி, அரசாணையை செயல்படுத்தும் விதமாக மாநிலம் முழுவதும் உள்ள மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மூடப்பட்டன. இதனால் டாஸ்மாக் விற்பனையில் சரிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பாக அமைச்சர் முத்துசாமி தலைமையில், இன்று அதிகாரிகள் மற்றும் முக்கிய நிர்வாகிகளுடன் டாஸ்மாக் மது விற்பனை தொடர்பான முக்கிய ஆலோசனைக்கூட்டம் நடைபெறுகிறது. இந்த ஆலோசனைக்கூட்டத்தில் டாஸ்மாக் நிறுவனத்தின் அடுத்தகட்ட செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
டாஸ்மாக் கடைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்துவது, கணினிமயமாக்கப்பட்ட ரசீது வழங்குவது, அதிகவிலைக்கு மதுபானங்கள் விற்பதை தடுப்பது மற்றும் பல முக்கிய விவகாரங்கள் குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட இருக்கிறது. மேலும் கட்டுப்பாட்டு அறை அமைப்பது மற்றும் விற்பனையை அதிகரிப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுமட்டுமின்கறி டாஸ்மாக் மதுபானங்களை பாட்டில்களில் அடைப்பதை தவிர்த்து, டெட்ரா பேக் களில் மது விற்பனை செய்வது தொடர்பாகவும், முக்கியமாக ஆலோசனை நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.