சென்னை:
கொரோனா ஊரடங்கால் மூடப்பட்ட டாஸ்மாக் மதுபானக் கடை சுமார் 43 நாட்களுக்கு பிறகு நேற்று மீண்டும் திறக்கப்பட்ட நிலையில், ஒரே நாளில் ரூ.172 கோடியே 59 லட்சத்துக்கு மது விற்பனை ஆனதாக, .டாஸ்மாக் நிர்வாகம் அதிகார பூர்வமாக அறிவித்து உள்ளது.
கொரோனா ஊரடங்கு காரணமாக தமிழகம் உள்பட நாடு முழுவதும் அனைத்து வணிக நிறுவனங் களும் மூடப்பட்டது. கடந்த 4ந்தேதி முதல் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் பல நிறுவனங்கள், கடைகள் திறக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து நேற்றுமுதல் (7ந்தேதி) அரசு மதுபான விற்பனைக் கடைகளான டாஸ்மாக் கடைகளும் கொரோனா கட்டுப்பாட்டு மண்டலங்கள் மற்றும் சென்னை தவிர மற்ற இடங்களில் திறக்கப்பட்டன.
சென்னையில் சுமார் 800 மதுக்கடைகளும் மற்ற ஊர்களில் உள்ள பல கடைகளும் அடைக்கப்பட்டி ருந்த நிலையில், நேற்று ஒரேநாளில் மதுவிற்பனை வரலாறு காணாத அளவுக்கு அமோகமாக விற்பனையாகி உள்ளது.
இதுகுறித்து டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 172 கோடியே 59 லட்சத்திற்கு மது விற்பனை ஆகி இருப்பதாக தெரிவித்து உள்ளது.
அதன்படி,
மதுரை மண்டலம்-46.78 கோடி
திருச்சி மண்டலம்-45.67 கோடி
சேலம் மண்டலம்-41.56 கோடி
கோவை மண்டலம்-28.42 கோடி
சென்னை மண்டலம்-10.16 கோடி
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.