சென்னை: தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் மதுவிற்பனை காரணமாக, குடிமகன்கள் அதிகரித்து வருகின்றனர். இந்த நிலையில், டாஸ்மாக் மது விற்பனை நேரத்தை பிற்பகல் 2 முதல் இரவு 8 மணி வரை என மாற்றலாமே என தமிழகஅரசுக்கு உயர்நீதிமன்றம் மதுரை கிளை அறிவுறுத்தி உள்ளது.
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை நேரத்தை குறைக்க கோரியும், பள்ளி மாணவர்களுக்கு மது விற்பனை செய்வதை தடுக்க கோரியும் திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் மற்றும் மதுரையை சேர்ந்த சமூக ஆர்வலர் கே.கே.ரமேஷ் ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனுவை தாக்கல் செய்தனர்.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதி மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகஅரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தமிழகத்தில் தான் டாஸ்மாக் கடைகள் குறைவான நேரம் திறக்கப்படுகிறது என தெரிவித்தார்.
இதையடுத்து கருத்து தெரிவித்த நீதிபதிகள் மது விற்பனையில் தமிழகம் தான் பிறமாநிலங்களைவிட முன்னிலையில் உள்ளது என்று கூறியதுடன் , மதுவிற்பனை நேரத்தை பிற்பகல் 2 முதல் இரவு 8 மணி வரை என மாற்ற ஏன் பரிசீலனை செய்யக்கூடாது என கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் கூறிய அரசு வழக்கறிஞர், கொரோனா காலத்தில் மற்ற மாநிலத்தில் இருந்து மதுவாங்கி வந்ததற்கான ஆயிரக்கணக்கான வழக்குகள் பதிவாகியுள்ளது. மது பிரியர்கள் மாற்று வழியையே யோசிக்கிறார்கள். மேலும், 21 வயது கீழ் உள்ளவர்களுக்கு மதுவிற்பனையை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றது என்று விளக்கம் அளிக்கப்பட்டது.
இதையடுத்து கேள்வி எழுப்பிய நீதிபதிகள், மாணவர்களுக்கு மதுவிற்பனை 100 சதவீதம் செய்யப்படவில்லையாமேலும், பள்ளி மாணவர்களுக்கு மது விற்பனை செய்யப்படுவதில்லை என்பதை தமிழக அரசு உறுதியாக சொல்ல முடியுமா? என்ற கேள்வி எழுப்பியதுடன், இந்த வழக்கு விசாரணையை வரும் டிசம்பர் மாதம் 1 தேதிக்கு ஒத்திவைத்தனர்.