சென்னை,
தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது.
கடந்த ஆண்டின் மழை வெள்ள பாதிப்புகள் இன்னும் நீங்கா நிலையில் ‘நாடா’ புயல் பயங்கரமாக இருக்கும் என பீதியை கிளப்பியது மீடியாக்கள், சமூக வலைதளங்கள் மற்றும் அரசு அறிவிப்புகள். அதற்கு தகுந்தாற்போல், வானிலை மையமும் புயல் குறித்து தமிழ அரசுக்கு தகவல் அனுப்பியது.
இதைத்தொடர்ந்து அரசும், பள்ளிகளுக்கு இரண்டு நாட்களை விடுமுறை விடுத்து பள்ளி மாணவர்களை குதூகலப்படுத்தியது.
புயல் காரணமாக, தமிழகத்தில் இதுவரை கண்டிராத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அரசு எடுத்தது. மக்கள் தங்களுக்கு தேவையான உணவு பொருட்களை வாங்கி சேமித்து வைக்கும்படியும், எமர்ஜன்சி நம்பர்களை கொடுத்தும், பேரிடர் மீட்பு குழுவினரை பாதிப்பு ஏற்படும் என சந்தேகித்த பகுதிகளுக்கு அனுப்பியும் மக்கள் எதிர்பார்க்காத அளவுக்கு முன் எச்சரிக்கை பணிகளை முடுக்கி விட்டிருந்தது.
தமிழ்நாடு அரசா இந்த அளவுக்கு முன்னேற்பாடுகளை செய்து வருகிறது, நாம் தமிழ்நாட்டில்தான் இருக்கி றோமோ என்று நெட்டிசன்கள் ஆச்சரியத்தில் வலை தளங்களில் கலாய்த்து வந்த நிலையில்,
மிகுந்த பரபரப்புடன், அதிபயங்கர வேகத்தில் ஆர்ப்பரித்து, ஆரவாரத்தோடு சீறிப்பாய்ந்து, அதிகமான மழை பொழியும் என்று நம்பிய நாடா புயல், நம்மை எல்லாம் சோகத்தில் ஆழ்த்திவிட்டு, யாருக்கும் பாதிப்பை ஏற்படுத்தாமல் அமைதியாகவே நடந்து, கடந்து சென்று விட்டது.
‘கடந்த வருடம்போல் இந்த வருடமும் தமிழக மக்களை கஷ்டப்படுத்த வேண்டாம் என்று நினைத்துவிட்டது போலும்….
இருந்தாலும் மற்றுமொரு புயல் தற்போது உருவாகி வருவதாக வானிலை மையம் தெரிவித்து உள்ளது.
நாகைக்கு மேற்கே நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று மாலை காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழக்கும் என கூறப்பட்டுள்ளது. இத னால் தமிழகம், புதுச்சேரி, கேரளப் பகுதிகளில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மேலும் அடுத்த 12 மணி நேரத்திற்கு மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. நாளை மறுதினம் ( டிசம்பர் 4) புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி, புயலாக மாறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கேற்றார்போல் இன்றும் தமிழகத்தின் கடலோர பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுவதுடன் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்தும் வருவது குறிப்பிடத்தக்கது.