சிட்னி: ஆஸ்திரேலிய சீனியர் கிரிக்கெட் அணியில் இடம்பெற்ற இரண்டாவது இந்தியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் 19 வயதான தன்வீர் சங்கா.
நியூசிலாந்துக்கு எதிரான ஆஸ்திரேலிய டி-20 அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் சுழற்பந்து வீச்சாளரான இவர். அத்தொடர் வரும் பிப்ரவரி மாதம் துவங்குகிறது.
இவர், கடந்த 2020ம் ஆண்டு, 19 வயதிற்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை போட்டியில், ஆஸ்திரேலியாவுக்காக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதில், ஆஸ்திரேலியா சார்பில் மொத்தம் 15 விக்கெட்டுகளை சாய்த்து, அதிக விக்கெட் எடுத்தவர் என்ற பெயரைப் பெற்றார். இவரின் சராசரி 11.46 மற்றும் எகானமி ரேட் 3.58.
இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தைப் பூர்வீகமாக கொண்ட தன்வீர் சங்காவின் குடும்பம், கடந்த 1997ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்தது. இவரின் தந்தையான ஜோகா, ஜலந்தரில் விவசாயியாக இருந்து, மாணவர் விசாவில் ஆஸ்திரேலியா சென்று, பின்னர் கார் ஓட்டுநராக ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வாய்ப்பு குறித்து தன்வீர் சங்கா கூறியுள்ளதாவது, “இந்த அறிவிப்பைக் கேட்டவுடன், வானத்தில் மிதந்ததைப் போன்று உணர்ந்தேன். இந்த நடப்பு உலகிற்கு திரும்புவதற்கே எனக்கு சிறிதுநேரம் பிடித்தது” என்று தனது பூரிப்பைப் பகிர்ந்துள்ளார்.