மாணவி லாவண்யாவின் உயிரிழப்பு விவகாரம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அவரது தற்கொலையில், மதமாற்ற வற்புறுத்தல்களுக்குப் பங்கு இருக்கிறதா, இல்லையா என்பதை, தொடரவிருக்கும் விசாரணையின்போதுதான் தெரிய வரும். ஆனால், தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள், தாங்களே தீர்ப்புகளை வழங்கி வருகின்றனர். இந்த விவகாரத்தில் தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்கி வருகின்றனர்.
மதமாற்ற வற்புறுத்தல் சம்பந்தப்பட்ட மிஷனரி பள்ளி வளாகத்தில் நிகழ்ந்ந்துள்ளதா என்பது ஆராயப்பட வேண்டியதும் அவசியம். இது தொடர்பான இரு வீடியோக்கள் வெளியாகி உள்ளது. அதில் ஒரு வீடியோவில் மதமாற்றம் செய்யச் சொன்னதாகவும், மற்றொரு வீடியோவில் அது தொடர்பான தகவல் ஏதும் இல்லை என்பதும் உண்மையே. ஆனால், இந்த விஷயத்தில் உண்மை கண்டறிய முன்வராமல், அரசியல் அநாகரிகம் நிகழ்ந்து வருகிறது.
பல பள்ளிகள், கல்லூரிகளில், தங்கள் மதத்தின் நம்பிக்கைகளை, பழக்க வழக்கங்களை, கருத்துகளை மாணவர்களிடம் திணிப்பது தமிழ்நாட்டில் இன்றளவும் தொடர்ந்து வருவது அனைவரும் அறிந்ததே. இதில், எந்த மதங்களின் சார்பில் நடத்தப்படும், நிர்வகிக்கப்படும் பள்ளிகளும் விதிவிலக்கல்ல. பல பள்ளிகளில் அசைவ உணவு சாப்பிட அனுமதி வழங்கப்படுவதில்லை, அதுபோல பல பள்ளிகளில் பெண் குழந்தைகள் பொட்டு, பூ வைத்துக்கொள்ள அனுமதிப்பது இல்லை என்பதும் அனைவரும் அறிந்தது. ஆனால், அவை இதுவரை பிரச்சினையாக்கப்படவில்லை.
ஆனால் கால மாற்றம் மற்றும் சூழ்நிலைகளை கருத்தில்கொண்டு, பெற்றோர்கள் தங்களது குழந்தைகள் தரமான கல்வி என்ற ஒரே வார்த்தைக்கு கட்டுப்பட்டு கல்வி நிலையங்களின் கட்டுப்பாடுகளை புறக்கணித்து தங்களது குழந்தைகள் நன்றாக படித்து வர வேண்டும் என்றே விரும்புகின்றனர்.
ஆனால், தற்போது தற்கொலை செய்துகொண்ட தஞ்சாவூர் மாணவியின் உயிரிழப்பை கொண்டு, அரசியல் கட்சிகள் அரசியல் செய்வது, தமிழ்நாட்டிற்கு தலைகுனிவையே ஏற்படுத்துகிறது.