தஞ்சாவூர்: தஞ்சை திருக்காட்டுப்பள்ளி  மாணவி லாவண்யா தற்கொலை வழக்கில், விஎச்பி பிரமுகர் முத்துவேல் என்பவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.   இவர்தான் மாணவி லாவண்யா வீடியோவை எடிட் செய்து, அதை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியவர் என்பது தெரிய வந்துள்ளது.  இவர்  மீது 15 வழக்குகள் உள்ளதாக காவல்துறை தெரிவித்து உள்ளது.

தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி தூய இருதய மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்த மாணவி லாவண்யா கடந்த 2022ம் ஆண்டு விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார். அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியம் வடுகர்பாளையம் கீழத்தெருவை சேர்ந்தவர் முருகானந்தம் என்பவரின் மகள் லாவண்யா தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல்பட்டியில் உள்ள தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் உள்ள விடுதியில் தங்கி பிளஸ்-2 படித்து வந்தார். அவர் கடந்த 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. லாவண்யாவை பள்ளி நிர்வாகம் கடந்த இரு ஆண்டுகளாக மதமாற்றம் செய்ய வலியுறுத்தி வந்தாக கூறப்பட்டது. இதுதொடர்பான பல வீடியோக்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

அந்த நேரத்தில்  லாவண்யா தற்கொலைக்கு முன்பு பேசியதாக ஒரு வீடியோ ஒன்று சமூகவலைதளத்தில் பரவியது. அந்த வீடியோவை குறிப்பிட்டு, மாணவி லாவண்யா மதமாற்றம் தொல்லை காரணமாக இறந்ததாக குற்றம்சாட்டப்பட்டு, அதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என போர்க்குரல் எழுப்பப்பட்டது.

இதனடிப்படையில் தமிழகம் முழுவதும் பா.ஜ.கவினர் மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுத்தனர். மதம்மாற்ற பிரச்சனையால் உயிரிழந்த மாணவி லாவண்யாவுக்கு நீதி வேண்டும் எனக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.வினர், சமூகவலைதளங்களில் Justice For Lavanya என்ற ஹேஸ்டேக்கையும் இந்திய அளவில் டிரெண்ட் செய்தனர். சென்னையில் மாணவி மரணத்துக்கு  நீதிகேட்டு மிகப்பெரிய போராட்டமும் நடத்தப்பட்டது.

இந்த போராட்டங்களின் விளைவாக பள்ளியின் வார்டன் சகாயமேரி கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், மாணவி லாவண்யா தற்கொலை விவகாரத்தில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் மற்றொரு வீடியோ ஒன்று வெளியானது. அதில்,  மாணவி லாவண்யா பேசியதுபோல் இருக்கும் அந்த வீடியோவில் தற்கொலைக்கான காரணம் மதமாற்றம் இல்லை எனத் தெரியவந்துள்ளது.

புதியதாக வெளியாகியிருக்கும் வீடியோவில், படிப்பில் முதல் ரேங்க் எடுப்பதாக தெரிவிக்கும் மாணவி லாவண்யா, வார்டன் கொடுக்கும் வேலையால் படிப்பில் முறையான கவனம் செலுத்த முடியவில்லை எனத் தெரிவித்துள்ளார். இதனால் விஷமருந்தியதாக தெரிவிக்கும் அந்த மாணவி, தான் விஷமருந்தியது யாருக்கும் தெரியாது என்றும் விளக்கமளித்துள்ளார். மேலும், பள்ளியில் பொட்டு வைத்துக் கொள்வேன், அதனை வைத்துக் கொள்ள கூடாது என யாரும் கட்டாயப் படுத்தவில்லை என்பது உள்ளிட்ட தகவல்களையும் தெரிவித்துள்ளார்.

பின்னர் இந்த விவகாரம் நீதிமன்றத்தக்கு சென்ற நிலையில், சிபிஐ விசாரணைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில், தற்போது லாவண்யா மதமாற்றம் செய்ய வலியுறுத்துவதாக வெளியான வீடியோ போலியானது என்பது தெரிய வந்துள்ளது. அந்த மாணவியின் வீடியோ   எடிட் செய்து, அதில் ஆடியோவை இணைத்து  அரசியல் விளையாட்டை நடத்தியது,  விஎச்பி யை சேர்ந்த பிரமுகர் என்பது தெரிய வந்துள்ளது.

தற்போது, முத்துவேல் கைது செய்யப்பட்டுள்ளார்.  அவர் மிரட்டல் விடுத்த ஆடியோவை ஆதாரமாக வைத்து கைது செய்யப்பட்டுள்ளார் என காவல்துறை தெரிவித்து உள்ளது

ஏற்கனவே முத்துவேல்மீது,  சிறுபான்மையினருக்கு எதிராக அவதூறு பரப்பியதாக அரியலூர் மாவட்டத்தில் உள்ள கைர்லாபாத், அரியலூர், கீழப்பாவூர் ஆகிய காவல் நிலையங்களில் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் மிரட்டி பணம் பறித்தல் தொடர்பாக 15 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.