டெல்லி: தஞ்சை மாணவி மரணம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனுத்தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் கட்டாய மதமாற்ற தடை சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்றும், தஞ்சை மாணவி தற்கொலை வழக்கை என்.ஐ.ஏ. விசாரிக்க வேண்டும் என வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாயா மனு தாக்கல் தொடர்ந்துள்ளார்.
தஞ்சாவூரில் 17 வயது மாணவி லாவண்யா தற்கொலை செய்து விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. அவரை கிறிஸ்தவ மதத்திற்கு மாற கட்டாயப்படுத்தியதால் தற்கொலை செய்துகொண்டதாக ஒரு தரப்பினரும், இல்லை என்று மற்றொரு தரப்பினரும் குற்றம் சாட்டி வருகின்றனர். இதுதொடர்பான சில வீடியோக்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டது.
இதுதொடர்பாக மதுரை உயர்நீதிமன்றத்தில் சிபிஐ விசாரணை உத்தரவை எதிர்த்து, தமிழகஅரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக லாவண்யாவின் பெற்றோர் தரப்பில் கேவியட் மனுவும் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், தஞ்சை மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, வழக்கறிஞர் அஷ்வினி குமார் உபாத்யாய உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், தஞ்சை மாணவி மதமாற்றம் விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும், “பரிசுகள், பணப் பலன்கள் அளிப்பதாக கூறி ஏமாற்றி, மிரட்டல் விடுப்பதன் மூலம் மோசடியாக மத மாற்றம் செய்யப்படுவதைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்த வேண்டும்.
மதமாற்றம் இந்தியா முழுவதும் உள்ள பிரச்சனை என்றும், அதற்கு எதிராக மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும் என்றும் மாநில மதமாற்ற எதிர்ப்புச் சட்டங்கள் மோசடியாக மதமாற்றம் செய்தல், மதமாற்றம் செய்ய வற்புறுத்துதல், மதமாற்றத்தை தூண்டுதல் ஆகியவற்றை துல்லியமாக வரையறுக்காததால், நடைமுறை ரீதியாக அமல்படுத்துவதற்கு மதமாற்றம் குறித்த தேசிய அளவில் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இந்த அனைத்து வழக்குகளும் விரைவில் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.