சென்னை: தமிழர்களின் இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் பிஞ்சிபோன செருப்பு என மாநில பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். இதற்கு கட்சியினர் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி, தேர்தல் பிரசாரம் அனல்பறந்து வருகிறது. திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் என 4முனை போட்டி நிலவும் சூழலில் கூட்டணி கட்சிகளை ஆதரித்து, கட்சி தலைவர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் திமுக சார்பில் டி.ஆர்.பாலு, தமாகா சார்பில் வேணு கோபால், அதிமுக சார்பில் பிரேம்குமார், நாம் தமிழர் கட்சி சார்பில் ரவிச்சந்திரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இந்த நிலையில், சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிடும், பாஜக கூட்டணி வேட்பாளரான தமாகாவைச் சேர்ந்த வேணுகோபாலை ஆதரித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பிரசாரம் செய்தார். அப்போது, சம்பந்தமே இல்லாமல் சிலர் பேசி வருகின்றனர். 1950 நடைபெற்ற விவகாரத்தை, தற்போதும் பேசி வருகின்றனர். இந்தி, சமஸ்கிருதம், வடக்கு, தெற்கு என பேசி வருகின்றனர். இன்னும் இந்த பிஞ்சிபோன செருப்பை திமுக தூக்கி எறியவில்லை என்று காட்டமாக விமர்சனம் செய்தார். மேலும், திமுக தேர்தல் வாக்குறுதிகளில் 20 சதவீதம் கூட நிறைவேற்றாமல் 99 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றியதாக பொய் பேசி வருவதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
அண்ணாமலையின் பேச்சு, இந்திய திணிப்பை எதிர்த்து போராட்டம் நடத்திய திமுகவை கொச்சைப்படுத்துவதாக உள்ளதாக சிலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இரண்டின் பொருளும் ஒன்றுதான் என்றார் பிரதமர் நேரு. அப்படியானால், தொடருமென மாற்றுவதில் என்ன தயக்கமெனக் கேள்வியெழுப்பினார் திமுக தலைவர் சி.என். அண்ணாதுரை. ஆனால், தமிழ்நாட்டின் எதிர்ப்புகளை மீறி 1963 ஏப்ரல் 23ஆம் தேதி அந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து, தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சியின்போது,, 1965ஆம் வருட இந்தித் திணிப்புஎதிர்ப்புப் போராட்டம் திவிரம் அடைந்தது. 1965ம் ஆண்டு ஜனவரி 25 தேதி தொடங்கிய இந்தப் போராட்டம் மார்ச் மாத நடுப்பகுதி வரை தொடர்ந்தது. இந்தி எதிர்ப்பு போராட்டம் துவங்கிய ஜனவரி 25ஆம் தேதியே தி.மு.க. தலைவர்கள் பலர் கைதுசெய்யப்பட்டனர். தொடர்ந்து நடந்த போராட்டத்தில் பல இடங்களில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் பல மாணவர்கள் உயிரிழந்தனர். பல மாணவர்கள் தீக்குளித்து உயிரிழந்தனர். இந்தப் போராட்டத்தில் ஒட்டுமொத்தமாக 70 பேர் வரை இறந்ததாகச் சொல்லப்பட்டாலும் நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழந்துள்ளனர் என்கிறார்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்.
தமிழ்நாட்டில் 1967ல் நடந்த தேர்தலில் காங்கிரஸ் தோற்கடிக்கப்பட்டு தி.மு.க. ஆட்சியைப் பிடிப்பதற்கு இந்த இந்தி எதிர்ப்புப் போராட்டம் முக்கியக் காரணமாக அமைந்தது. தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, கீழப்பழுவூர் சின்னச்சாமி தீக்குளித்து உயிரிழந்த ஜனவரி 25ஆம் நாளை தமிழ்நாட்டில் மொழிப் போர் தியாகிகள் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.
ஆனால், சமீப காலமாக இந்தி என்பது நகர்ப்புறங்களில் முக்கிய மொழியாக பார்க்கப்படுகிறது. இதனால், பெரும்பாலான தனியார் பள்ளிகளில் இந்தி பயிற்றுவிக்கப்படுகிறது. அதுபோல மத்தியஅரசு அலுவலகங்கள் மற்றும் மத்தியஅரசு நடத்தும் தேர்வுகளிலும் இந்திய பிரதானப்படுத்தப்பட்டு வருகிறது. இருந்தாலும், சமீப காலமாக இளந்தலைமுறையினரிடையே இந்தி கற்றுக்கொள்ளும் நடைமுறை அதிகரித்து உள்ளது.
அதுமட்டுமின்றி, தமிழ்நாட்டில் பள்ளிகள், மற்றும் கல்லூரிகளை நடத்தி வரும், ஆட்சியில் உள்ளவர்கள் மற்றும் ஏராளமான திராவிட கட்சி பிரமுகர்கள், இந்தியை மாணவர்களுக்கு கற்றுக்கொடுத்து, இந்தி மொழியை வளர்த்து வருகின்றனர். ஆனால், மக்களிடையே, இந்தி தெரியாது போடா என்று பிதற்றி வருகிறார்கள்.
தமிழ்நாட்டில் இந்திக்காரன் இல்லை என்றால், எந்தவொரு பணிகளும் நடைபெறாது என்ற சூழலுக்கு வடநாட்டவர்களின் ஆதிக்கம் காலூன்றி வருகிறது. அதனால், சமீபகாலமகா இந்தி விஷயத்தில், தமிழக அரசியல் கட்சிகளும் மவுனம் காத்து வருகின்றன.