அவிநாசி: தமிழர்களையும், தமிழக மக்களையும் விலைக்கு வாங்க முடியாது என்று ராகுல் காந்தி தெரிவித்து உள்ளார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அவிநாசியில் இன்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது திரண்டிருந்த மக்கள் மத்தியில் அவர் கூறியதாவது:
மத்தியில் ஆளும் அரசு, ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாசாரம் என செயல்படுகிறது. தமிழக அரசையும் தமிழக மக்களையும் விலைக்கு வாங்கிவிடலாம் என்று எண்ணுகிறது. ஆனால் அவர்களுக்குத் தெரியாது தமிழர்களையும், தமிழக மக்களை விலைக்கு வாங்க முடியாது என்று.
விவசாயத்தையும் சிறு, குறு தொழில்களையும் 5,6 முதலாளிகளுக்கு விற்றுவிடலாம் என்று பிரதமர் மோடி கருதுகிறார். எங்கள் குடும்பத்தின் ஈடுபாடு தமிழர்களிடத்திலும், தமிழகத்திலும் எப்படி இருந்தது என்று உங்களுக்கு தெரியும்.
அரசியல் அல்லாத உறவு தான் எங்கள் குடும்ப ரீதியான உறவு. அதிலும் தமிழகத்தில் பாட்டி, தந்தையின் உறவு இவை அனைத்தும் அன்பின் அடிப்படையில் மரியாதையின் அடிப்படையில் ஏற்பட்ட உறவு.
எனவே தமிழக மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த ஒரு அரசை கொண்டுவர விரும்புகிறோம். ஏழை, சிறு தொழில், குறுந்தொழில் ஆகியவற்றை உயர்த்த விரும்புகிறோம். தமிழகத்தின் நிலையை உயர்த்துவதற்கு நாம் உறுதி கொள்வோம். முன்பிருந்ததை போல தமிழகத்தை மீண்டும் கொண்டுவர முயற்சிக்கிறோம்.
இங்குள்ள இளைஞர்கள் வேலைவாய்ப்பை பெறுவதற்கு எவ்வாறு முயற்சிக்கிறார்கள் என்பது எனக்கு தெரியும். ஜிஎஸ்டி வரி விதிப்பு செய்ததனால் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்களிடம் உண்மையாகவும் மரியாதையாகும் சிறப்பாகவும் ஒரு உறவை ஏற்படுத்த விரும்புகிறேன். நான் உங்களிடம் பொய் கூற வரவில்லை. உண்மை பேசவே வந்துள்ளேன். அதை நான் பிரதமரிடம் விட்டுவிடுகிறேன் என்று பேசினார்.