சென்னை:  

சாஹோ திரைப்படம் நாடு முழுவதும் இன்று வெளியான நிலையில், அடுத்த ஒரு மணி நேரத்தில்,  தமிழ் ராக்கர்ஸ் இணைய தளத்தில் வெளியிட்டு, படக்குழுவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளனர்.

பிரபாஸ் நடித்துள்ள சாஹோ திரைப்படம், மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே இந்தியா முழுவதும் இன்று வெளியானது. இப்படம் வெளியான சில மணி நேரங்களிலேயே தமிழ்ராக்கர்ஸ் இணைய தளத்தில் சட்டவிரோதமாக வெளியாகியுள்ளது.

இரண்டு வருடங்களுக்கு முன்பு ராஜமெளலி இயக்கத்தில் வெளியான பாகுபலி- இரண்டாம் பாகம் இந்தியா முழுதும் வசூலை வாரிக்குவித்தது. பிரபாஸூக்கும் இப்படம் திருப்புமுனையாக அமைந்தது. அதன்பிறகு, பிரபாஸ் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையே சாஹோ திரைப்படம் தெலுங்கு, இந்தி, தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகிறது.

மிகுந்த பொருட்செலவில் உருவாக்கப்பட்ட சாஹோ திரைப்படத்தை சுஜீத் இயக்கியுள்ளார். யுவி க்ரியேஷன்ஸ் மற்றும் டி.வி சீரிஸ் இப்படத்தைத் தயாரித்துள்ளது. இதில் பிரபாஸ், ஷ்ரத்தா கபூர், அருண் விஜய், நீல் நிதின் முகேஷ் உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். சுதந்திர தினத்தன்றே இப்படத்தை வெளியிடப் படக்குழு முடிவெடுத்தது. ஆனால், ஆகஸ்ட் 30-ம் தேதிக்குப் படம் தள்ளிப்போனது.

இந்தியில் பிரபாஸின் முதல் படம் இது. மிகப்பெரிய பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ளது என மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது இப்படம் இன்று வெளியானது. திரைப்படத்தின் விமர்சனங்கள் அனைத்தும் படக்குழுவுக்குச் சாதகமாக வந்த நிலையில், படம் வெளியான சில மணி நேரங்களிலேயே தமிழ்ராக்கர்ஸ் இணையதளத்தில் படம் வெளியானது. இதனால் படக்குழு அதிர்ச்சியடைந்துள்ளது.

தமிழ்ராக்கர்ஸ் இணையதளம் சட்டவிரோதமாகப் படங்களை இணையத்தில் வெளியிட்டுவந்தது. இதையடுத்து, சென்னை உயர்நீதிமன்றம் இந்த இணையதளத்தைத் தடைசெய்து உத்தரவிட்டது. ஆனாலும், வேறு சில இணைய முகவரியில் தமிழ்ராக்கர்ஸ் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. படம் வெளியான அன்றோ அல்லது சிலசமயம் படம் வெளியாவதற்கு முன்னதாகவே இணையத்தில் படத்தை வெளியிட்டு, சினிமாத்துறைய அதிர்ச்சியில் ஆழ்த்திவருகிறது

தமிழ்ராக்கர்ஸ். சமீபத்தில் வெளியான லயன் கிங், அலாதின் உள்ளிட்ட பல படங்கள் தமிழ்ராக்கர்ஸ் இணையதளத்தால் பாதிப்படைந்துள்ளன. குறிப்பாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 2.0 படம் இதனால், மிகப்பெரிய சரிவைச் சந்தித்தது. தற்போது சாஹோ திரைப்படமும் இணையத்தில் வெளியாகியுள்ளது.

இந்தியத் திரைப்பட கூட்டமைப்பு, தமிழ்ராக்கர்ஸ் உள்ளிட்ட பல பைரசி தளங்களுக்கு எதிராகப் போராடிவருகின்றனர். ஆனால், இவர்களின் ஆட்டத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்பதே நிதர்சனம்.