கர்நாடகாவை கண்டித்து இன்று முழு அடைப்பு! சாலை, ரயில் மறியல் !

Must read

 
சென்னை: தமிழகத்தின் உரிமையான காவிரி நீர் தர மறுக்கும், கர்நாடக மாநில அரசைக் கண்டித்து, இன்று தமிழகம் முழுவதும் முழு அடைப்பு நடத்த உள்ளதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு அறிவித்துள்ளது. இதற்கு திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு அளித்திருக்கின்றன.
a
காவிரி நடுவர் மன்ற தீர்ப்புபடி தமிழகத்துக்கு ஒவ்வொரு வருடமும், கர்நாடக அரசு 192 டிஎம்சி தண்ணீர் அளிக்க வேண்டும். ஆனால் இதனை கர்நாடக அரசு தர மறுக்கிறது. இதனால் காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை குறுவை சாகுபடி மட்டுமே பாதிக்கப்பட்ட நிலையில் இந்த வருடம் தண்ணீர் இல்லாமல் 10 லட்சம் ஏக்கர் சம்பா சாகுபடியும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
விவசாய தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு இழந்து மாவட்டங்களை விட்டு வெளியிடங்களுக்கு  கூலி வேலைக்குச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுபோல பாலாற்றில் ஆந்திர அரசு அணை கட்டுவதாலும், முல்லைப்பெரியாறில் அணை நீர்மட்டத்தை உயர்த்த தொடர்ந்து கேரள அரசு எதிர்ப்பு தெரிவிப்பதாலும் தமிழகத்தின் விவசாயம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சம்பா சாகுபடிக்கு கர்நாடக அரசு தரவேண்டிய 50 டிஎம்சி தண்ணீரை வழங்க வலியுறுத்தி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு வரும் செப். 2ம் தேதி விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கை எதிர்கொள்ளும் வகையில் கடந்த 27ம் தேதி கர்நாடக முதல்வர் சித்தராமையா அனைத்து கட்சி கூட்டத்தை  நடத்தினார்.  அதில் தமிழகத்திற்கு தண்ணீர் தர முடியாது என தீர்மானம் போடப்பட்டது.  இதை தெரிவித்த சித்தராமையா, “உச்சநீதிமன்றத்தில் சட்டப்படி வழக்கை எதிர்கொள்வோம்” என்றும் அறிவித்தார்.
இதையடுத்து தமிழக விவசாயிகள் இன்று முழு அடைப்பு நடத்த முடிவு செய்தார்கள்.  காவிரியில் தமிழகத்துக்கு உடனடியாக தண்ணீர் பெற மத்திய அரசும், தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்குமுறை குழு உடனடியாக அமைக்க வேண்டும். முல்லைப்பெரியாறு, பாலாற்றில் தமிழகத்தின் உரிமைகளை நிலை நிறுத்த வேண்டும். இதற்காக தமிழக சட்டமன்றத்தில் அவசர தீர்மானம் நிறைவேற்றி அனைத்து கட்சி தலைவர்களுடன் தமிழக முதல்வர் பிரதமரை சந்திக்க வேண்டும். அனைத்து விவசாயிகளின் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை விவசாயிகள் வலியுறுத்தி உள்ளார்கள்.
இந்த கோரிக்கைகளுக்காக இன்று (30ம் தேதி) தமிழகத்தில் முழு அடைப்பு நடத்தப்படுகிறது.  1000 இடங்களில்  சாலைமறியல், 100 இடங்களில் ரயில் மறியல் நடத்த அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு அழைப்பு விடுத்துள்ளது.
இந்த முழு அடைப்பு மற்றும் மறியல் போராட்டத்துக்கு திமுக, காங்கிரஸ், தமாகா, முஸ்லீம் லீக், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. வணிகர்கள் சங்க பேரமைப்பு உள்ளிட்ட சில வணிக நிறுவனங்களும் சேவை சங்கங்களும், பல்வேறு தொழிற்சங்கங்களும் இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
 

More articles

Latest article