சென்னை
மேலும் கடுமையான மழைக்கு வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் அறிவித்துள்ளார்.
தனது முகநூல் பக்கத்தின் மூலமாக தமிழ்நாடு வெதர்மேன் மழை குறித்து அறிக்கை அளித்து வருவது தெரிந்ததே. தற்போது புதிய அறிவிப்பு ஒன்று அந்தப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
அந்தப் பதிவில், ”நேற்று முதல் இன்று காலை 8.30 மணிவரையிலான 24 அணி நேரத்தில் மணிமுத்தாறு அணைப்பகுதியில் 451 மிமீ மழை பெய்துள்ளது. கடந்த 25 வருடங்களில் இதுவே மிகவும் அதிகமான மழை ஆகும். விருதுநகர், தூத்துக்குட், திண்டுக்கல் போன்ற பல மாவட்டங்களில் கனமழை பெய்துள்ள போதிலும், பிற்பகலுக்கு மேல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் கவனத்துடன் இருக்கவும். சென்னையிலும் இன்று மழை பெய்யக்கூடும்.
ஒக்கி புயல் கடந்து விட்டாலும் அதன் தாக்கம் காரணமாக இனிமேல் தான் கடும் மழை பெய்யும். அதுதான் உண்மையான மழையாக இருக்கும். திண்டுக்கல், தேனி, பாபநாசம், மணிமுத்தாறு, மாஞ்சோலை, கோதையாறு பகுதிகளிலும் சுற்று வட்டாரத்தில் மிக மிக கனமழை பெய்யக் கூடும். இதனால் பாபநாசம் அணை நிரம்பி தாமிரபரணி ஆற்றில் அதிக நீர் திறந்து விடப்படலாம். இந்த கனமழை கடலூர், காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் இருக்கக் கூடும்.
திருச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம், சென்னை, மற்றும் புறநகர் பகுதியில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் அவ்வப்போது மழை பெய்யலாம். பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்’ என அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.