சென்னை

சென்னை நகரில் மழை இல்லாதது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் என அழைக்கப்படும் பிரதீப் ஜான் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்து வரும் வேளையில் சென்னை நகரில் ஒரு துளி மழை கூட பெய்யாமல் உள்ளது. இதனால் நகரில் வெப்பம் கடுமையாக அதிகரித்துள்ளது. அத்துடன் குடிநீர் பஞ்சமும் சென்னை மக்களை மிகவும் அச்சுறுத்தி வருகிறது. இது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் என அழைக்கப்படும் பிரதிப் ஜான் தனது முகநூல் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

அந்த விளக்கம் பின் வருமாறு :

”கடந்த 180 நாட்களாக சென்னையில் மழையே இல்லை. அது ஏன்?  சென்னை சபிக்கப்பட்டுள்ளதா?  மரங்கள் இல்லாததாலா? மக்களாலா?

தமிழ்நாட்டில் அனைத்து இடங்களிலும் மழை பெய்கிறது. தற்போது கூட பல மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் போது சென்னை வெறும் பார்வையாளராக மட்டும் உள்ளது. சென்னையின் தட்பவெட்ப நிலை குறித்து பார்ப்போம். பொதுவாகவே கோடை காலம் இவ்வளவு கடுமையாக இருந்ததா?

மேலே உள்ள புகைப்படத்தை பாருங்கள். சென்னையில் இந்த வருடம் தொடர்ந்து 180 நாட்கள் மழை இல்லாதது குறித்து மக்கள் பல காரணங்கள் கூறி வருகின்றனர். ஆனால் கடந்த வருடம் கூட தொடர்ந்து 187 நாட்கள் மழை இன்றி வாழ்ந்துள்ளோம். கடந்த 20 ஆண்டு விவரங்களை பார்க்கும் போது புயல் அல்லது காற்றழுத்த தாழ்வு மட்டுமே நமக்கு பருவ மழைகளுக்கு இடையே மழையை அளித்துள்ளது.

சென்னைக்கு மழை பெய்ய வேண்டும் என்றால் வேலூர் மற்றும் நகரி மலைகளில் மேகங்கள் உருவாகி சென்னையை நோக்கி நகர வேண்டும். இம்முறையில் மட்டுமே ஜூன் முதல் செப்டம்பர் வரை மழை பெய்து வருகிறது. தற்போது வேலூரில் உருவாகும் மேகங்கள் கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் பகுதிகளுக்கு சென்றுள்ளது.

வரும் நாளில் தென் மேற்கு பருவமழை எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சென்னையில் முதல் வெப்பசலன மழை விரைவில் பெய்யக்கூடும். ஆனால் இந்த மழையால் சென்னையின் நீர் தேவைகள் தீராது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

தற்போது உங்களுக்கு சென்னையில் மழை இன்மைக்கான விடை கிடைத்திருக்கும். இது சாபத்தினால், மக்களால், மற்றும் மரம் இன்மையால் ஏற்படவில்லை. இது சென்னையின் தட்பவெட்ப நிலை ஆகும். எப்போதாவது புயல், அல்லது காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் மூலம் மட்டுமே மார்ச் முதல் மே வரையிலான மாதங்களில் வெப்ப சலன மழை பெய்துள்ளது”  என பதிந்துள்ளார்.