மதுரை:
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு போட்டியான ஜல்லிக்கட்டு போட்டி கின்னஸ் சாதனை படைத்து தமிழர்களுக்கும், தமிழகத்துக்கும் மேலும் பெருமை சேர்த்துள்ளது.
பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தின் தென்மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இன்று பல மாவட்டங்களில் போட்டிகள் நடைபெற்ற வந்த நிலையில், விராலிமலையில் பிரமாண்டமான ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில், விராலிமலையில் இன்று 1,353 காளைகள் மற்றும் சுமார் 500க்கும் மேற்பட்ட காளையர்களும் களமிறங்கி உலச சாதனையை ஏற்படுத்தி உள்ளனர்.
ஏற்கனவே அதிக காளைகளை பங்கேற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு சாதனையை முறியடித்து, விராலிமலை ஜல்லிக்கட்டு புதிய சாதனை படைத்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் உலக சாதனை படைக்கும் நோக்கில் ஜல்லிக்கட்டு போட்டியை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஏற்பாடு செய்து வந்தார். இந்த ஜல்லிக்கட்டு போட்டியை இன்று காலை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது.
போட்டியில் கலந்துகொள்ள 2 ஆயிரம் காளைகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், 1353 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டது. 500க்கும் மேற்பட்ட காளையர்களும் பங்கேற்றனர். போட்டியில் காளை களை அடக்கிய வீரர்களுக்கும், காளைகளின் உரிமையாளர்களுக்கு பல்வேறு வகையான பரிசுகள் வழங்கப்பட்டன. மிக்சி, கிரைண்டர், சைக்கிள், தங்ககாசு, கட்டில், அண்டா, குண்டா என பல்வகை பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன.
இந்த போட்டியில், அதிகபட்சமாக 21 காளைகளை அடக்கிய திருச்சியைச் சேர்ந்த முருகானந்தம் என்பவருக்கு முதல் பரிசாக கார் வழங்கப்பட்டது.
16 காளைகளை அடக்கிய திருச்சி காட்டூரைச் சேர்ந்த கார்த்திக் என்பவருக்கு இரண்டாவது பரிசாக புல்லட் வழங்கப்பட்டது.
இதுவரை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளிலேயே அதிக அளவிலான 1353 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டு உலக சாதனை படைக்கப்பட்டது.
கின்னஸ் அங்கீகார குழுவை சேர்ந்த 2 பேர் ஜல்லிக்கட்டு போட்டியை நேரில் பார்வையிட்டு சாதனைக்கான சான்றிதழை வழங்கினர் உலக சாதனைக்கான சான்றிதழ், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் வழங்கப்பட்டது.