சென்னை: ரஷ்யாவில் உயிரிழந்த தமிழக மருத்துவ மாணவர்கள் உடல்கள், 12 நாட்களுக்கு பிறகு சென்னை வந்தது.
ரஷ்யாவின் வோல்கோகிராட் மருத்துவ பல்கலைக்கழகத்தில் கடலூரை சேர்ந்த ஆர்.விக்னேஷ், திருப்பூரை சேர்ந்த முகமது ஆசிக், சேலத்தை சேர்ந்த மனோஜ் ஆனந்த் மற்றும் சென்னையை சேர்ந்த ஸ்டீபன் லிபாகு ஆகியோர் மருத்துவ மேற்படிப்பு படித்து வந்தனர்.
கடந்த 9ம் தேதி வால்கா ஆற்றில் அவர்கள் 4 பேரும் மூழ்கி உயிரிழந்தனர். அவர்களின் உடல்களை உடனே தமிழகம் கொண்டுவர, ரஷ்யாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளுக்கு வெளியுறவு அமைச்சர் ஆணை பிறப்பிக்க வேண்டுமென, திமுக தலைவர் ஸ்டாலின் மத்திய அரசுக்கு வேணடுகோள் விடுத்தார்.
தமிழக அரசும் மத்திய அரசிடம் வலியுறுத்தி இருந்தது. இதையடுத்து அந்த 4 மாணவர்களின் உடல்கள் ரஷ்யாவிலிருந்து துருக்கி நாட்டிற்கு கொண்டு செல்லப்பட்டன. பின்னர் இஸ்தான்புல் விமான நிலையத்திலிருந்து சரக்கு விமானம் மூலம் 4 பேரின் உடல்களும் சென்னை கொண்டு வரப்பட்டுள்ளது.
12 நாட்களுக்குப் பிறகு ரஷ்யாவில் இருந்து உடல்கள் விமானம் மூலம் சென்னை வந்து சேர்ந்தன. சென்னை பழைய விமான நிலைய வளாகத்தில் உள்ள சர்வதேச சரக்கக அலுவலகத்தில் 4 மாணவர்களின் உடல்களுக்கான நடைமுறை சோதனைகள் முடிந்து அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.