சென்னை

மிழக போக்குவரத்து கழகங்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் ரூ.1700 கோடி பேருந்து பராமரிப்புக்காக செலவழித்துள்ளது.

தமிழக போக்குவரத்து கழகங்களில் பல பேருந்துகள் அதன் வாழ்நாட்கள் முடிந்த பிறகும் சாலைகளில் ஓட்டப்பட்டு வருகின்றன,    இதனால் ஓட்டுனர்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.   இந்த பேருந்துகளால் சாலை விபத்துக்கள் அதிகரித்து வருகின்றன.   அரசு போக்குவரத்து பேருந்துகளால் கடந்த ஐந்து வருடங்களில் நடந்த 13700 சாலை விபத்துக்களில்   4700 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இது குறித்து போக்குவரத்து கழக ஊழியர் சங்க நிர்வாகிகள் பராமரிப்பு பணிகள் சரியான தரத்துடன் செய்யப்படாததும் இந்த விபத்துக்களுக்கு காரணம் என தெரிவிக்கின்றனர்.   பேருந்துகளில் உபரி பாகங்கள் பழுதடையும் போது புதிய பாகங்கள் வாங்குவதற்கு பதில் ஓடாத பேருந்துகளில் இருந்து கழற்றி உபயோகப்படுத்தப் படுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

சமீபத்தில் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தமிழக போக்குவரத்து கழகங்கள் பேருந்து பராமரிப்புக்காக ஐந்து வருடங்களில் ரூ.1723 கோடி செலவிடப்பட்டுள்ளதாக தகவல் அளிக்கப்பட்டுள்ளது..    இது பழுதடைந்த உதிரிபாகங்களை மாற்றவும் டயர்கள் ரீட்ரெடிங் செய்வதற்கும் செலவானதாக அந்த தகவல் தெரிவிக்கிறது.

இது குறித்து முன்னாள் போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர், “தற்போது அரசு அளித்த தகவலின்படி ரூ. 603 கோடி செலவில் 2316 புதிய பேருந்துகள் வாங்கப்பட உள்ளதாக தெரியவந்துள்ளது.   அதன்படி பார்த்தால் இந்த பராமரிப்பு செலவான ரூ.1723 கோடியில் 6600 புதிய பேருந்துகள் வாங்கப்பட்டிருக்கலாம்.

போக்குவர்த்து கழகங்களின் 21600 பேருந்துகளில் 70%க்கும் மேற்பட்ட பேருந்துகள் தங்களின் வாழ்நாள் இலக்கான 6 லட்சம் கிமீ தூரம் என்பதை தாண்டி இன்னும் ஓட்டப்பட்டு வருகின்றன.   அத்துடன் இவைகளின் டயர்கள் 2 முறைக்கு மேல் ரீட்ரெடிங் செய்யப்பட்ட்வை ஆகும்.   இவ்வாறான டயர்கள் மூலம் செலுத்தப்படும் பேருந்துகள் கட்டுப்பாட்டை இழப்பதால் விபத்துக்கள் நேரிடுகின்றன” என தெரிவித்துள்ளார்.

இது குறித்து தற்போதைய மூத்த போக்குவரத்து கழக அதிகாரி, “தமிழகத்தில் உள்ள 8 போக்குவரத்துக் கழகங்களும் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன.   ஒரு நாளைக்கு ரூ.9 கோடி வரை நஷ்டம் உண்டாகிறது.   அதனால் புதிய பேருந்துகள் மற்றும் உதிரிபாகங்கள் வாங்க போதிய நிதி இன்மை உள்ளது” என கூறி உள்ளார்.