சென்னை: ரூ.3 கோடி மோசடி வழக்கில் தேடப்பட்டு வரும்  முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக, தமிழ்நாடு காவல்துறை  லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்து உள்ளது.

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது பல்வேறு வழக்குகள் உள்ளன.  ஆவினில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்ததாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் அவர்மீது  2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த வழக்கில் கைது செய்யப்படலாம் என அஞ்சிய ராஜேந்திர பாலாஜி, முன்ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை கடந்த 17ஆம் தேதி  சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது. இதையடுத்து அவரை கைது செய்ய விருதுநகர் காவல்துறையினர்  8 தனிப்படைகளை அமைத்து தேடி வருகிறது. தனிப்படையினர்,  பெங்களூரு, சென்னை, கேரளா போன்ற பல்லேறு பகுதிகளில் அவரைத் தேடி வருகின்றனர்.

இதற்கிடையில், ராஜேந்திர பாலாஜி தரப்பில் உச்சநீதிமன்றத்திலும் முன்ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இந்த நிலையில்,  ராஜேந்திர பாலாஜி வெளிநாடு தப்பிச் செல்வதை தடுக்க விமான நிலையங்களுக்கு காவல் துறை லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.