சிறப்புக்கட்டுரை: 

ஒரு மிக நல்ல செய்தியுடன் தொடங்கலாமா…?

திருவாளர் உதயசந்திரன் ஐ.ஏ.எஸ். அவர்கள், பள்ளிப் பாடப் புத்தகத்தை வடிவமைப்பதில் மிகுந்த சிரத்தை எடுத்து வருகிறார்கள். இந்த அத்தியாயம் எழுதத் தொடங்கும் முன், அவர்களை சந்தித்து விட்டு வந்தேன். மிக நல்ல அனுபவம்.

இனி….

மொழிப் பாடங்களைப் பொறுத்த மட்டில், தமிழை விடவும் ஆங்கிலப் பாடங்கள், மிகவும் சிறப்பாக இருக்கின்றனவோ என்று தோன்றுகிறது.

ஆங்கிலத்தை ஒரு பாடமாக அல்லாமல், ஒரு மொழியாகக் கற்றுத் தருகிற முயற்சி, முழுமையாக மேற்கொள்ளப் பட்டு இருக்கிறது. இலக்கணம் மட்டுமே மொழி அல்ல; அதனைத் தாண்டி அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்துவதற்கு ஏதுவாக, அதாவது, ஒரு மொழியில் இயல்பாக எழுத, பேச… என்ன செய்ய வேண்டுமோ, அதனை மிகச் சரியாக முன் எடுக்கிறது புதிய பாடத் திட்டம்.

’ப்ளஸ் 2 நிலையில் படிப்பவர்கள், தாம் பெற்ற ஆங்கில அறிவை, பள்ளிக்கு வெளியில், பயனுள்ள தாக மாற்ற முடிகிற திறன் பெற்று இருப்பார்கள்’ – இவ்வாறு, கலைத் திட்டம் கூறுகிறது.

இதனை நோக்கியே, பாடங்களும் பயிற்சிகளும் அமைகிற பட்சத்தில், உலகளாவிய வேலைத் திறன் பகுதியில், தமிழக மாணவர்கள், பல படிகள் மேலே வருவார்கள். ஐயமில்லை. மனமார வரவேற்கலாம்.

தமிழ் பாடப் பகுதியைப் பொறுத்த மட்டில், இந்த அளவுக்கு சொல்ல முடியவில்லை. ’வறண்டு’ காணப் படுகிறது. சிந்தனையில், செயல் படுத்துவதில் ஒரு வித ‘வறட்சி’ நிலவுகிறது.

’மொழியின் அமைப்பு முறை, ‘பண்பாட்டு ஊடாட்டங்களால்’ தீர்மானிக்கப் படுகிறது’ என்கிறது கலைத் திட்டம். ஏதாவது புரிகிறதா…? தமிழ் பாடத் திட்ட வடிவமைப்பு நெடுகவுமே, வறண்ட தமிழ் நடையை உயர்ந்த தமிழ் நடையாகத் தருகிற முயற்சி தெ(எ)ரிகிறது.

மீண்டும் மீண்டும் சொல்கிறோம். எளிய மொழியில் இனிய நடையில் இந்தப் பாடங்கள் அமைக்கப்பட வேண்டும். பாமரனாலும் இலக்கணப் பிழை இன்றி, நல்ல தமிழ் பேச முடியும். உண்மையில் தமிழ், சாமான்யனின் மொழி. ஆனால் அதனை, பண்டிதர்களின் மொழியாக மாற்றுகிற முயற்சியாகவே புதிய பாடத் திட்டத்தைப் பார்க்க முடிகிறது.

’மொழியின் உயர்ந்தபட்ச அடைவுகளை உறுதி செய்தல்’, ’தொடரியல் நிலையில் பொருளை வேறுபடுத்தும் முறையை விளக்குதல்’, ’புணரியல் விதிகளைக் கற்பித்தல்’ ஆகியன, மேலும் மேலும் இலக்கணத்துக்குள் மொழியை சிறை பிடித்து விடுமோ என்கிற அச்சத்தை ஏற்படுத்துகிறது.

வெட்டிமன்றம், வழவழா (வழக்காடு) மன்றம் போன்றவை எல்லாம், எந்த விதத்திலும் மொழிக்கு நன்மை பயப்பன அல்ல. பாடத் திட்டத்துக்குள் வருவதற்கு அனுமதிக்கவே கூடாது.  தமிழ் மொழி யின் சிதைவுக்கும் தமிழர்களின் சிந்தனை ஆற்றல் மழுங்கிப் போனதற்கும் காரணமான இவ்வடி வங்கள், பாட அங்கீகாரம் பெறுவது, மன்னிக்கவும், தமிழ் மொழிக்கு செய்யப் படும் ஆகப் பெரிய துரோகம். தலையை சொறிந்து கொள்ள, கொள்ளிக் கட்டைதானா கிடைத்தது….?

அதே சமயம், நல்ல மாற்றமும் கொண்டு வரப்பட இருக்கிறது. ’பள்ளிகளில் செய்யுளை முதன்மைப் படுத்தி இலக்கணம் கற்பிக்கப்பட்டு வருகிறது. இது, உரைநடைக் காலம். எனவே, கால மாற்றங்களுக்கு ஏற்ப உரைநடைக்கான இலக்கணத்திற்கும் பாடத்திட்டத்தில் இடமளிக்க வேண்டியுள்ளது.’

துளிப்பா (’ஹைக்கூ’?), கதைப்பாடல், நாட்டுப்புறப் பாடல், ஓசை நயம் மிக்க பழமொழிகள் ஆகியன இடம்பெறும் என்பதும் மிக நல்ல செய்தி.

அறிவியல், கணிதப் பாடங்களில் வரவேற்கப் பட வேண்டிய பல பகுதிகள் அறிமுகம் ஆகின்றன. இது குறித்து மேலும் விளக்கமாக, அவ்வத் துறை வல்லுநர்கள் சொல்வதே சரியாக இருக்கும்.

வருங்காலத்தில், கணினி, இணையம், சமூக வலைத் தளங்கள், கற்பித்தலில், கற்றுக் கொள்ளலில் முக்கிய இடம் வகிக்கும் என்று தோன்றுகிறது.

எந்த வயதில், எந்த வகுப்பில் இருந்து, இவற்றை சிறுவர்களுக்கு அறிமுகப் படுத்தலாம் என்பது விவாதத்துக்கு உரியது. இவையெல்லாம் தேவைதானா என்பதே கூட, இன்னும் பரவலாக, ஆழமாக, கலந்து ஆலோசித்துத் தீர்மானிக்க வேண்டிய விஷயம்தான்.

மாற்றம் வேண்டாம் என்பதில்லை; கணினி, இணைய வசதிகளும், அதைப் பற்றிய அடிப்படை அறிவும் எந்த அளவுக்கு கிராமப் பகுதிகளில் வளர்ந்து இருக்கிறது…. கிராமப்புறப் பெற்றோர், தம் பிள்ளைகளின் படிப்பில் இருந்து அந்நியப்பட்டுப் போதல் ஆகிய விவரங்கள் கணக்கில் கொளப் பட்டுள்ளனவா என்பதெல்லாம் தெரியவில்லை.

இப்போதைக்கு இது விஷயத்தில் அவசரப்பட வேண்டாம் என்றுதான் தோன்றுகிறது.

நிறைவாக, திருவாளர் உதய சந்திரன் ஐ.ஏ.எஸ். அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பு. மிக நேர்மையான அலுவலர்; அதை விடவும், மிக நல்ல மனிதர். தமிழ் நாட்டில், உயர் தரப் பள்ளிக் கல்வி எல்லாருக்கும் கிட்ட வேண்டும்; அதற்குத் தன்னாலான அத்தனையும் செய்ய வேண்டும் என்று தீர்க்கமாக சிந்தித்து, உறுதியுடன் செயல்படுகிறார்கள்.

நெறிமுறை சார்ந்த கல்வியில் மிகுந்த ஈடுபாடும் அக்கறையும் அவர்களிடம் உள்ளதை உணர்ந்து கொள்ள முடிந்தது. ’இதற்கான பாடங்கள் எப்படி அமைந்தால் நன்றாக இருக்கும் என்று யோசித்துச் சொல்லுங்கள்; நிச்சயமாகப் பரிசீலிக்கலாம்’ என்று நம்பிக்கை தெரிவித்தார்கள்.

யாராக இருந்தாலும் சரி, பள்ளிக் கல்வித் தரம் மேம்பட, நல்ல ஆரோக்கியமான ஆலோசனைகளைத் தாராளமாக வழங்கலாம்; உரிய முறையில் பரிசீலித்து, பாடத் திட்டத்தில் சேர்ப்பது குறித்துத் தீர்மானிக்கலாம் என்று திறந்த மனதுடன் செயல் படுகிறது பள்ளிக் கல்வித் துறை. அபாரம். மனமுவந்த பாராட்டுகள்.

இத்தொடரில் முன் வைத்துள்ள கருத்துகள், எதிர்மறை சிந்தனைகள் அல்ல; மாறாக, மாற்றத்துக்கான நேரம் வருகிற போதே, முழுமையான, முன்னெற்றத்துக்கான மாற்றமாக அமைய வேண்டும் என்கிற ஆதங்கத்தின் வெளிப்பாடு.

அறிந்த வரையில், நிறை குறைகளைத் தந்துள்ளோம். இதை அப்படியே ஏற்றுக் கொள்வதோ, அடியோடு நிராகரிப்பதோ, அவரவர் விருப்பம். ஆனால், இத்தனை பெரிய நிகழ்வு குறித்து எந்த சிந்தனையும் இல்லாமல் அலட்சியத்துடன் நடந்து கொள்வது, நிச்சயமாக ஏற்புடையது அல்ல.

பொதுமக்களின் பங்களிப்புக்கு வாய்ப்பு தரப் பட்டு இருக்கிறது. அறிவுரைகளை, ஆலோசனைகளை, நடு நிலைமையுடன் தெரிவிப்போம். இது நமது கடமை. நாளைய சமுதாயத்துக்கு நாம் ஆற்றும் சேவை.

இப்போது எதுவும் சொல்லாமல், செய்யாமல், நாளை அல்லது மறு நாள், அரசைக் குறை சொல்கிற யாரும், மன்னிக்கவும், பொறுப்பற்ற அறிவிலிகள்.

புதிய பாடத் திட்டத்தை முன் எடுத்துச் செல்லும் அனைவருக்கும், நல்வாழ்த்துகள். விரைவில் தனது பழம் பெருமையை வென்றெடுக்கட்டும் நம் தமிழகம்.

நிறைவு.

–    பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி.

–    baskaranpro@gmail.com

–    Twitter @ Baskaranitax.

Also read

தமிழ்நாடு புதிய வரைவு பாடத்திட்டம்: குறை, நிறை என்ன? பகுதி: 4:

தமிழ்நாடு புதிய வரைவு பாடத்திட்டம்: குறை, நிறை என்ன? பகுதி: 3:

தமிழ்நாடு புதிய வரைவு பாடத்திட்டம்: குறை, நிறை என்ன? பகுதி: 2:

https://patrikai.com/tamilnadu-new-draft-syllabus-what-is-good-and-bad-part-1/