தமிழில் உறுதிமொழி எடுத்து பதவி ஏற்ற தமிழக எம்.பி.க்கள்….! பாஜக இடையூறு…..

Must read

டில்லி:

17வது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் நேற்று முதல் பதவி ஏற்று வருகிறார் கள். இன்று முற்பகல் தமிழக எம்.பி.க்கள் பதவி ஏற்றனர். அப்போது, தமிழ் வாழ்க என கூறி உறுதி மொழி எடுத்த தமிழக எம்பிக்களுக்கு எதிராக பாஜக எம்பிக்கள் பாரத் மாதா கி ஜே கோஷம் எழுப்பி இடையூறு செய்தனர். இதன் காரணமாக மக்களவையில் பரபரப்பு ஏற்பட்டது.

லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்களின் பதவி ஏற்பு நிகழ்ச்சி நேற்று முதல் மக்களவையில் நடைபெற்று வருகிறது. மக்களவை தற்காலிக சபாநாயகர் வீரேந்திர குமார் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.

நேற்று பிரதமர் மோடி உள்பட மூத்த உறுப்பினர்கள் பதவி ஏற்ற நிலையில், இன்று தமிழக எம்.பி.க்கள் உள்பட பல எம்.பி.க்கள் பதவி ஏற்றனர்.

தமிழக எம்.பி.க்கள் பதவி ஏற்றபோது, தமிழ் வாழ்க, பெரியார் வாழ்க என்று கூறி திமுக எம்.பி.க் கள் பதவி ஏற்றனர். தமிழ்  என்ற வார்த்தையை கேட்டதும் பாஜக எம்பிக்களுக்கு கடும் ஆத்திரம் ஏற்பட்டது. தமிழ் வாழ்க என திமுக எம்பி கூறியதால் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பாரத் மாதா கி ஜே என பாஜக உறுப்பினர்கள் முழக்ககமிட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.

ஆனால், பாஜக எம்.பி.க்களின் கோஷத்தை கண்டுக்காமல் தமிழக எம்.பி.க்கள் பதவி ஏற்றனர்.  தமிழக எம்.பி.க்களான  ஜெயக்குமார், கலாநிதி வீராச்சாமி, தமிழச்சி தங்கபாண்டியன், தயாநிதி மாறனும் தமிழில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.

திமுக எம்.பி. டி.ஆர்.பாலு, கனிமொழி, தயாநிதி மாறன், ஆ.ராசா போன்றோர்  தமிழ் வாழ்க, வாழ்க கலைஞர், வாழ்க பெரியார் என கூறி பதவி ஏற்றனர். பொள்ளாச்சி தொகுதி எம்பியாக சண்முக சுந்தரம், கரூர் தொகுதி எம்பியாக ஜோதிமணி, திருச்சி தொகுதி எம்பியாக திருநாவுக்கரசர், சிவகங்கை தொகுதி எம்.பி. கார்த்தி சிதம்பரம், கன்னியாகுமரி தொகுதி எச்.வசந்தகுமார், விஷ்ணு பிரசாத், ரவிக்குமார், கௌதம சிகாமணி, பாரிவேந்தர், ரமேஷ், திருமாவளவன், ராமலிங்கம், செல்வராசு, பார்த்திபன், சின்ராஜ் ஆகியோர் உள்பட பலர் எம்.பி.க்களாக பதவியேற்பு.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் பதவி ஏற்கும்போது,  வெல்க ஜனநாயகம், வெல்க சமத்துவம் என்று கூறி தமிழில் பதவியேற்றுக்கொண்டார். விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த விழுப்புரம் எம்.பி ரவிக்குமார், ‘வெல்க தமிழ், வெல்க அம்பேத்கர்’ என்று கூறி பதவியேற்றார்.

கோவை (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) எம்.பி, பி.ஆர்.நடராஜன் பதவியேற்கும்போது, ‘உலகத் தொழிலாளர்களே ஒன்று கூடுங்கள்’ என்று கூறி பதவியேற்றுக்கொண்டார்.

திருச்சி தொகுதி காங்கிரஸ் எம்.பி திருநாவுக்காரர், கடவுள் மீது உறுதி கூறி பதவியேற்றார்

தேனி மக்களவை தொகுதியில் வெற்றி பெற்ற அதிமுக  எம்.பி.யாக  ரவீந்திரநாத் குமாரும் பதவியேற்றார்.  அவர் பதவி ஏற்கும்போது, வாழ்க எம்ஜிஆர், ஜெயலலிதா வாழ்க… வந்தே மாதரம்’ என கூறி தேனி எம்பியாக பதவியேற்றார்.

More articles

Latest article