சென்னை,
மத்திய அரசு அமல்படுத்தி உள்ள சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பில் கைத்தறிக்கும் 5 சதவிகிதம் வரி விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கு தமிழக கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.
கடந்த ஆண்டு ஜூலை 1ந்தேதி முதல்நாடு முழுவதும் ஒரே வகையான வரியை அமல்படுத்தும் நடைமுறை யான ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரியை மத்திய அரசு அமல்படுத்தியது. இதன் காரணமாக பொருட்களின் விலை குறையும் என்று எதிர்பார்த்த நிலையில், அனைத்து பொருட்களின் மீதான விலைகளும் உயர்ந்து வருகிறது.
ஏற்கனவே வரி விதிக்கப்படாத பொருட்களும் தற்போது வரிக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதால், விலை உயர்வு காரணமாக பொதுமக்கள் பெரும் அவதிப்பட்டு வருகிறார்கள்.
அதுபோல கைத்தறி பொருட்களுக்கும் 5 சதவிகிதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சாமானிய மக்கள் உபயோகப்படுத்தும் கைத்தறி துணிகளும் விலை உயர்ந்துள்ளது.
இந்நிலையில், தமிழக கைத்தறி துறை நிறுவனமான கோ ஆப்டெக்ஸ் நிறுவனத்துக்கு ‘ஸ்கைப்’ வசதியுடன் கூடிய ஆன்லைன் ஷாப்பிங் செயலி தொடக்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. செயலியை தொடங்கி வைத்து நிகழ்ச்சியில் பேசிய, அமைச்சர் ஓ.எஸ். மணியன், மத்திய அரசு அமல்படுத்தி உள்ள 5% ஜிஎஸ்டி வரியால், கைத்தறித்துறைக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்று கூறினார்.
மேலும், ஜிஎஸ்டியில் இருந்து கைத்தறித்துறைக்கு விலக்களிக்க வேண்டும் என மத்திய அரசை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி வருகிறார் என்றும் கூறினார்.
அதிமுக அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் மத்திய அரசுக்கு எதிரான பேச்சு சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.