சென்னை:

ட்டமன்றத் தேர்தலக்கு குறையாத பரபரப்புடன் நடந்துவருகிறது தமிழ்நாடு மருத்துவர் சங்கத் தேர்தல்.

இது குறித்து ஏற்கெனவே செய்திகள் வெளியிட்டிருந்தோம். இந்தத் தேர்தலில் தற்போது மருத்துவர்களுக்கு வாக்குச் சீட்டுகள் அனுப்பப்பட்டுக்கொண்டிருக்கின்றன. மருத்துவர்கள் வாக்களித்த பதிவுத்தபாலில் தமிழ்நாடு மெடிகல் கவுன்சிலுக்கு – தேர்தலை நடத்தும் அலுவலர்களுக்கு பிப். 12க்குள் அனுப்ப வேண்டும். மறுநாள் முடிவுகள் அறிவிக்கப்படும்.

இந்த நிலையில் பிரச்சாரம் தீவிரமாக நடந்துவருகிறது. தமிழகம் முழுதும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் வாக்களிக்க இருக்கும் இந்தத் தேர்தலில்  நான்கு அணிகள் போட்டியிட்டியிடுகின்றன.

இந்த முறை நான்கு அணிகள் போட்டியிடுகின்றன. இவற்றில் மருத்தவர் டி.காமராஜ் தலைமையிலான மருத்துவர் அரங்க அணி முன்னிலையில் இருக்கிறது.

“ஊழலற்ற, நேர்மையான, வெளிப்படைத் தன்மையுடன் செயல்படுவோம்” என்ற முழக்கத்தை முன்வைத்துள்ளது இந்த அணி.

இதற்குக் காரணம், நீட் தேர்வை எதிர்த்து போராட்டம் நடத்திய அணி இது. மத்திய அரசு குன்னூர், கிண்டியில் செயல்பட்ட வேக்சின் உற்பத்தி நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்க்க முடிவு செய்தபோது  அதை எதிர்த்து போராடியவர்கள் இந்த அணியினர்.

இந்த நிலையில் மருத்துவர் காமராஜ் உள்ளிட்ட  மருத்துவர் அரங்க அணியே பிரதான அணியினரை சந்தித்தோம்.

அவர்கள் நம்மிடம் தெரிவித்ததாவது:

“வருடம்தோறும் மருத்துவக் கழகத்தில் பதிவு செய்யும் மருத்துவர்களின் முகவரி  உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் முழுமையாக பராமரித்து ஒழுங்குபடுத்துவோம் (டேட்டா பேஸ் உருவாக்குவது), மருத்துவர்களின் தரத்தை மேம்படுத்துவோம்.  மருத்துவர்கள் தவறு செய்ததாக புகார் எழுந்தால் அதன் உண்மை சூழலை முழுமையாக ஆய்வு செய்து, தவறு நடந்திருந்தால் உரிய நடவடிக்கை மேற்கொள்வேண்டும். ஆனால் இதுவரை பொறுப்பில் இருந்தவர்கள் அத்தகைய பணிகளை முறையாகச் செய்யவில்லை. தவறு செய்யும் மருத்துவர்களை திருத்துவதற்கு மாறாக, அவர்களை பழிவாங்கும் விதத்தில் நடந்துகொண்டனர்.

சிறப்பாக பணிபுரியும் மருத்துவர்களை பாராட்டுவதற்குகூட மனமில்லாமல் தண்டிக்கும் முறையையே பின்பற்றினர்.

குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால், கடந்த 2012 ம் வருடம் நடந்த தேர்தலில் 82 ஆயிரம் மருத்துவர்கள் மட்டுமே வாக்களிக்க தகுதியானவர்கள் என்று அறிவிக்கப்பட்டது. பதிவு செய்த மருத்துவர்களின் விலாசம் முறையாக பராமரிக்கப்படவில்லை. மருத்துவர்களின் விலாசம் புதுப்பிக்கப்படவும் இல்லை. ஜனநாயக முறைப்படி தேர்தலை நடத்தவில்லை.

ஒரு பிரிவினர் தங்களுக்கு சாதகமாக வாக்குச் சீட்டை பயன்படுத்திக்கொண்ட அநீதியும் நடந்தது.

இதுபோன்ற ஏராளமான குளறுபடிகளால் வாக்கு சதவீதம் மிகவும் குறைந்து, 13 ஆயிரம் மருத்துவர்கள் மட்டுமே வாக்களித்தனர்.

தமிழ்நாடு மருத்துவக் கழகத்தில் கோடிக் கணக்கில் பணம் புழங்குகிறது. இந்தத் தொகையைக் கொண்டு, மக்கள் சார்ந்த பணிகளில் மருத்துவர்களை மேம்படுத்தி, திறனை வளர்த்துக் கொள்ள பயன்படுத்தியிருக்கலாம்.

ஆனால், முந்தைய நிர்வாகத்தினர் அதைப்பற்றி சிறிதும் சிந்திக்கவே இல்லை. பதிவு செய்யும் மருத்துவர்களிடம் பணம் வசூலிப்பதில் மட்டுமே ஆர்வம் செலுத்தினர்.

மருத்துவர்கள், மருத்துவத்துறை, பொதுமக்கள் – இம்மூன்றும் நேர்க்கோட்டில் வளம் பெற வேண்டும்.. நலம் பெற வேண்டும். ஆனால் இந்த சீரான வளர்ச்சியில் முந்தைய நிர்வாகத்தினர் அக்கறை செலுத்தவில்லை.

ஆனால், இம்முறை அந்த நிலை மாறும் என்றே தோன்றுகிறது.

கடந்த காலங்களைவிட,  தற்போது  மருத்துவர்களிடம் விழிப்புணர்வு பெருகியுள்ளது.  தேர்தலில் வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து, ஆர்வத்துடன் தேர்தலை எதிர்கொள்ள விரும்புவது புரிகிறது.

இந்த தேர்தலில் போட்டியிடும் மக்களுக்கான மருத்துவர் அரங்க அணியின் முக்கிய வாக்குறுதி ‘ஊழலற்ற நிர்வாகத்தை அளிப்போம்” என்பதுதான்.

இந்த முழுக்கத்திற்கு அனைத்து தரப்பு மருத்துவர்களிடமும்  குறிப்பாக, இளம் மருத்துவர்களிடம் பெரும்  வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்த அணியினர் அறிவித்துள்ள இதர வாக்குறுதிகளும் முக்கியமானவை:

மருத்துவக் கழகத்தில் பதிவு செய்யும் அனைத்து மருத்துவர்களுக்கும் வாழ்நாள் அடையாள அட்டை அளிப்போம், மருத்துவர்களின் முகவரிகள் மாறும்போது உடனுக்குடன் புதுப்பிப்போம்,  மருத்துவர்கள் தங்கள் திறமையை மென்மோலும் மேம்படுத்திக்கொள்ள கருத்தரங்குகள், பயிற்சிப் பட்டறைகள் நடத்துவோம்,  சிறப்பாக செயல்படும் மருத்துவர்களின் சேவைகளை பாராட்டி விழாக்கள் நடத்துவோம் – அங்கீகாரம் கிடைக்கச் செய்வோம்,  மருத்துவர்களின் பல்வேறு ஆய்வுக் கட்டுரைகள், பல்வேறு பிரச்சனைகள் குறித்த சிந்தனைகளை வெளிக்கொண்டு வர ‘செய்தி மற்றும் பார்வைகள்’ என்ற செய்தி இதழ் ஒன்றையும் மாதாமாதம் வெளியிடுவோம்.

டாக்டர் காமராஜ்

ஐந்து வருடங்களுக்கு  ஒரு முறை ஜனநாயக முறைப்படி கட்டாயம் தேர்தலை நடத்துவோம். வாக்கு சீட்டு முறைக்கு மாற்றாக ஆன் லைன் வாக்குப்பதிவு முறையை கொண்டு வருவோம்.  துறை ரீதியான நடவடிக்கைகள், வழக்குகளில் உள்ள குளறுபடிகளை களைந்து ஜனநாயக முறைப்படி செயல்படுவோம்.  வரவு-செலவு கணக்கு பராமரிப்பதில் வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுவோம்.

சென்னையை மட்டுமே மையப்படுத்தியுள்ள அதிகாரத்தை மாநிலம் முழுமைக்கும் மாவட்ட வாரியாக பரவலாக்க நடவடிக்கை எடுப்போம்.  பொதுமக்களும் மருத்துவர்களும் எந்த நேரத்திலும் எளிதாகச் சந்திக்கும் வெளிப்படையான நிர்வாகத்தை அளிப்போம்.

மத்திய அரசு தற்போது  கொண்டுவந்துள்ள புதிய மசோதா மூலம் ஐஏஎஸ் அதிகாரிகள், அரசியல்வாதிகள், எம்பிபிஎஸ் படிக்காத மருத்துவர்களும் மருத்துவக் கழகத்தில்  உறுப்பினர்களாக நியமிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இது மருத்துவக் கழகத்தின் நோக்கத்தைச் சிதைத்துவிடும். ஆகவே, இதை எதிர்த்து எங்கள் அணி அனைத்து மருத்துவர்களையும் திரட்டி தீவிரமாகப் போராடும். தமிழ்நாடு மருத்துவக் கழகத்தை பாதுகாக்கும்.

இந்த நோக்கத்திற்காகவே மக்களுக்கான மருத்துவர் அரங்கம் சார்பில் ஏழுவர் கொண்ட ஒரு அணி யாக களம் இறங்கியிருக்கிறோம். அனைத்துத் தரப்பு மருத்துவர்களின் நல் ஆதரவுடன் வெற்றி பெற்று நிர்வாகக் குழுவை அமைப்போம். இந்த தேர்தலில் எங்கள் அணிக்கு அனைத்து ஜனநாயக முற்போக்கு இயக்கங்களும் அமைப்புகளும் ஆதரவு அளிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்” என்று டாக்டர் காமராஜ் தலைமையிலான மருத்துவர் அரங்க அணி/யினர்  தெரிவித்தனர்.